Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 14 டிசம்பர் (ஹி.ச.)
கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அரசு அமைந்தது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பிறகு சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைத்தது. 2½ ஆண்டுகளுக்கு பிறகு சித்தராமையா முதல்-மந்திரி பதவியை டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அப்போது ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி சித்தராமையா ஆட்சி அமைந்து 2½ ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து டி.கே.சிவக்குமார் தனக்கு முதல்-மந்திரி பதவி வேண்டும் என்று கோரி போர்க்கொடி தூக்கினார்.
இதையடுத்து கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் மேலிடம் இதில் தலையிட்டு 2 பேரும் சில நாட்களுக்கு அமைதியாக இருக்கும்படி உத்தரவிட்டது.
மேலும் கட்சி மேலிட உத்தரவுப்படி சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் பரஸ்பரம் சந்தித்து சிற்றுண்டி சாப்பிட்டனர். அத்துடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, தன்னை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்ற டி.கே.சிவக்குமாரின் கோரிக்கையை கட்சி மேலிடம் நிராகரித்துவிட்டதாக கூறினார்.
இதையடுத்து முதல்-மந்திரி பதவி விவகாரம் பற்றிய விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் பெலகாவியில் தனித்தனியாக தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி செல்கிறார்கள்.
அங்கு காங்கிரஸ் சார்பில் நடைபெறும் வாக்கு திருட்டுக்கு எதிரான காங்கிரஸ் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
Hindusthan Samachar / JANAKI RAM