Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 14 டிசம்பர் (ஹி.ச.)
தர்மபுரிக்கு இன்று (டிச 14) வருகை தந்துள்ள முதல்வர் ஸ்டாலின் அங்கு நடைபெற்ற முன்னாள் அமைச்சர் பழனியப்பன் இல்லத் திருமண விழாவில் அவர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
இந்த திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
தர்மபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் பழனியப்பனின் மகன் எழில் - கிருத்திகா மணவிழாவை நடத்தி வைத்து, வாழ்த்தும் வாய்ப்பு அமைந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகள், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள், ஆய்வுக் கூட்டங்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இப்படியான சூழலில் பழனியப்பன் இல்ல விழாவில் கலந்து கொண்டது எனக்கே ரிலாக்ஸாக அமைந்துள்ளது. நேற்று முன்தினம் வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதலாக 17 லட்சம் சகோதரிகளுக்கு ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்கிறோம். இதுவரை 1.13 கோடி பேருக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது இதன் எண்ணிக்கை 1.30 கோடியாக உயர்ந்துள்ளது.
இப்போதும் சில தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நிச்சயம் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். அதேபோல் மகளிர் உரிமைத் தொகை இன்னும் உயரும் என்றும் கூறி இருக்கிறேன்.
அதுமட்டுமல்லாமல் ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு தான் நம்பர் ஒன் மாநிலமாக உருவாகி இருக்கிறது. இது நாங்கள் வெளியிட்ட அறிக்கை அல்ல.. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை. எவ்வளவோ சோதனைகள் அளிக்கப்பட்டாலும், அதனை கடந்து சாதனை படைத்துள்ளோம்.
இன்னொரு பக்கம் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. எஸ்.ஐ.ஆர் பணிகளில் திமுக எவ்வளவு வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறது. நமது வாக்குரிமையை நாம் காப்பாற்றியாக வேண்டும். இன்னும் விழிப்புடன் வேலை பார்க்க வேண்டும். இப்போது பாதி வேலை மட்டுமே முடிவடைந்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே முழு பணிகளும் முடிவடையும். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கிறது. திமுக அரசின் சாதனைகள் மக்களுக்கு சென்றடைந்திருக்கிறது.
ஆனால் எதிரிகள் நம்மை வீழ்த்த முயற்சிக்கும் போது, நாம் ஏமாந்துவிடக் கூடாது. 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b