Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச.)
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்.எல்.பி.மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் 'டியர் ரதி'. இந்தப் படத்தை 'இறுதிப் பக்க'த்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரவீன் கே மணி இயக்கியுள்ளார்.
படத்தின் கதை எதைப் பற்றிப் பேசுகிறது?என்பதைப் பற்றி இயக்குநர் பேசும்போது,
இன்றைய சூழலில் ஆணோ பெண்ணோ தனக்கு விருப்பமான ஒத்த அலை வரிசை மனம் கொண்ட எதிர்பாலின நட்பைத் தேடினால் அடைவது சுலபம். அந்த நட்பு காதலாவது கடினம்.
அதைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமல்ல, மிகக்கடினம். அப்படிப் பிறரிடம் பேசத் தயங்கும் -குறிப்பாகப் பெண்களிடம் பேசத் தயங்கும் ஓர் வாலிபன் ஸ்பா போன்ற ஓர் அழகு நிலையத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்து 'டேட்டிங்'கிற்காக வெளியே அழைத்துச் செல்கிறான் .அதே நாளில் அந்தப் பெண்ணைத் தேடி போலீஸ் ஒரு பக்கம், ரவுடிக் கும்பல் ஒரு பக்கம் எனத் துரத்துகிறார்கள்.
வெளியே சென்றவர்கள் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அது என்ன மாதிரியான பிரச்சினை ?அதை எப்படி எதிர்கொண்டார்கள்? என்பதுதான் 'டியர் ரதி' படத்தின் கதை.
இன்றைய தலைமுறையினர் காதல் இணையைத் தக்க வைத்துக் கொள்ள எப்படி எல்லாம் போராடுகிறார்கள்? அவர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள், சிக்கல்கள் என்ன?அதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதைச் சொல்லும் வகையில் 'ரொமான்டிக் காமெடி'யாக இந்த 'டியர் ரதி' திரைப்படம் உருவாகி இருக்கிறது என்றார்.
படத்தில் சரவண விக்ரம் நாயகனாக நடித்துள்ளார்.
இவர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் 84 நாட்கள் இருந்தவர்.
அவர் அறிமுகமாகும் படமிது. நாயகியாக ஹஸ்லி அமான் நடித்துள்ளார் இவர் மலையாளத்தில் கதிர் நாயகனாக நடித்த 'மீஷா' படத்தில் நடித்த இவர், இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் ,நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில் படித்தது மட்டுமல்லாமல் பலருக்கும் நடிப்புப் பயிற்சி அளித்து வருபவர்.
'மதராஸி' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பாத்திரத்திற்கான உடல் மொழியை வடிவமைத்தவர் இவர்தான்.
இவர்களுடன் சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியன் மற்றும் பலர் நடித்துள்ளனர் .
Hindusthan Samachar / Durai.J