Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 14 டிசம்பர் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டம், விக்கிரபாண்டியம் கிராமத்தில் 2015-ஆம் ஆண்டு ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி பி.ஆர்.பாண்டியன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மண்ணையும் மக்களையும் காக்க தொடர்ந்து குரல் கொடுத்துவரும் விவசாயத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த 13 ஆண்டுகள் சிறை தண்டனை, விவசாய நிலங்களைக் காக்க போராடியவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டனை என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்தத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில், ஓ.என்.ஜி.சி. மற்றும் நீதிமன்றம் மூலமாக தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மன்னார்குடி பெரியார் சிலை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதுகுறித்து மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீதர் பேசுகையில், மண்ணை காக்க போராடிய பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதிலுமுள்ள விவசாயிகளை ஒன்றுதிரட்டி, வரும் டிசம்பர் 23-ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும், என்று அறிவித்தார்.
மேலும், இந்தப் போராட்டத்திற்கு முன்னதாக, வரும் டிசம்பர் 16-ஆம் தேதி முதல் எதிர்க்கட்சித் தலைவர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களையும் விவசாயிகள் நேரில் சந்தித்து ஆதரவு கோர விருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் திருப்பதி வாண்டையார் தலைமை வகித்தார்.
மேலும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN