அமைச்சர் கே என் நேருவுக்கு எதிராக அதிமுக லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
சென்னை, 14 டிசம்பர் (H.S.) அமைச்சர் கே என் நேருவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை லஞ்ச ஒழிப்பு துறையில் மனு அளித்துள்ளார். தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
கே. என் நேரு


சென்னை, 14 டிசம்பர் (H.S.)

அமைச்சர் கே என் நேருவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை லஞ்ச ஒழிப்பு துறையில் மனு அளித்துள்ளார்.

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனம், டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

லஞ்சம் வாங்கிக்கொண்டு பணி நியமனம், டெண்டர் முறைகேடுகள், சதித்திட்டங்கள் மூலம் ரூ. 1020 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த ஊழலுக்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை வேலைக்கு பணம் பெற்றதாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின்படி அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை கடிதம் அனுப்பி உள்ளார்.

நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை அனுப்பி உள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam