Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 14 டிசம்பர் (ஹி.ச.)
இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் கோப்பையை வென்று அசத்தியது.
இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு கடந்த ஜூன் 4-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. அப்போது மைதானத்துக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து பெங்களூரு மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் பிற அலுவலர்கள் துணை முதல் - மந்திரி டி.கே. சிவக்குமாரை சந்தித்து பேசினர்.
அதன் பிறகு டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டியில், சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகளை நிறுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சர்வதேச மற்றும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த கர்நாடக அமைச்சரவை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் முதற்கட்டமாக உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே போட்டிகளுக்கு சுமார் 3,000 ரசிகர்கள் வரை அனுமதிக்க கர்நாடக கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்டோரை உள்ளடக்கிய விஜய் ஹசாரே டெல்லி அணியின் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்தத் திட்டமிடப்படுள்ளது.
இதனால் விராட் கோலி மீண்டும் சின்னசாமி மைதானத்தில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM