ஒருவரும் வசிக்காத பாகத்தில் 63 பேர் வசிப்பதாக விவரம் எஸ்.ஐ.ஆரில் பதிவேற்றம் - சார் ஆட்சியர் நோட்டீஸ்
நெல்லை, 14 டிசம்பர் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான மாஞ்சோலையில் இயங்கி வந்த தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் கடந்த ஆண்டு மூடப்பட்டது. இதனால் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட பகுதி
Mancholai Garden


நெல்லை, 14 டிசம்பர் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான மாஞ்சோலையில் இயங்கி வந்த தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் கடந்த ஆண்டு மூடப்பட்டது. இதனால் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அரசு சார்பில் அவர்களுக்கு மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

மேலும் இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்த தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வேலை வேண்டி மலையை விட்டு இடம் பெயர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு கீழே அரசு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் மாஞ்சோலை பகுதிகளில் இயங்கி வந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 5ல் இருந்து மூன்றாக குறைக்கப்பட்டது. குறிப்பாக வாக்குச்சாவடி பாக எண் 102-ல் ஒருவர் கூட வசிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுபோன்ற சூழலையில் மாஞ்சோலை வசிக்கும் தொழிலாளர்களுக்கு எஸ்ஐஆர் படிவம் வழங்கப்பட்டது. இந்நிலையில் பாகம் எண் 102ல் ஒருவர் கூட இல்லை என தெரிவிக்கப்பட்ட சூழலில் அங்கு எஸ்ஐஆர் படிவம் வழங்கப்பட்டு மொத்தம் 73 வாக்காளர்களில் 63 பேரின் விவரங்கள் மொபைல் ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாஞ்சோலை பகுதியில் எஸ்ஐஆர் படிவம் வழங்கப்பட்டதில் குளறுபடி நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சேரன்மகாதேவி சார் ஆட்சியரிடம் இருந்து பாக எண் 102 வாக்குச்சாவடி நிலை அலுவலர் பேச்சியம்மாள் என்பவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த விளக்க நோட்டீஸில், ''102 பாகம் எண் கொண்ட பகுதியில் மொத்தம் உள்ள 73 வாக்காளர்களில் 63 வாக்காளர்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த மாதம் 29‌ ஆம் தேதி அன்று உதவி வாக்காளர் பதிவு அலுவலர், அம்பாசமுத்திரம் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டதில் பாகம் எண் 102 பகுதியில் ஒருவர் கூட வசிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று எஸ்ஐஆர் படிவங்களை வழங்கி திரும்ப பெற வேண்டும் என்ற விதிமுறைகளுக்கு மாறாக இருக்கிறது. இப்பகுதியில் தொடர்ந்து வசிக்காதவர்களிடமும், அரசு வேறு பகுதியில் வீடு வழங்கியவர்களிடமும், சொந்த ஊருக்கு சென்றவர்களிடம் படிவங்களை திரும்ப பெற்று பதிவேற்றம் செய்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே குறிப்பாணையை பெற்றுக்கொண்ட 7 நாட்களுக்குள் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று பேச்சியம்மாளுக்கு வழங்கப்பட்ட நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் மொத்தமாக மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் சுமார்‌ 93 பேர் மட்டுமே வசிப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள 5 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதாவது ஏற்கனவே தேயிலை தோட்டம் மூடப்பட்டு இருப்பதால் அந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்கப்பட்டு வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. எனவே அங்கு வசிக்கும் தொழிலாளர்களை எப்படியாவது கீழே இறக்க வேண்டும் என அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதே சமயம் தோட்டம் மூடப்பட்டிருந்தாலும் அங்கேயே பல ஆண்டுகளாக வசிப்பதால் கீழே இறங்க மனம் இல்லாமல் தங்களுக்கு அங்கேயே வாழ்வாதாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று தொழிலாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது ஒருபுறம் தமிழ்நாடு அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி கீழே அவர்களுக்கு குடியிருப்புகள் மற்றும் வங்கி கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த சலுகையை ஏற்று பெரும்பாலான தொழிலாளர்கள் கீழே வந்து விட்டனர். இன்னும் சுமார் 50 குடும்பத்தினர் தொடர்ந்து மாஞ்சோலையிலே வசித்து வருகின்றனர்.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அரசு அவர்களை வலுக்கட்டாயமாக கீழே இறக்காமல் இருந்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கப்பட்டதில் மாஞ்சோலையில் தொழிலாளர்கள் சுமார் 1000 பேர் இன்னும் அங்கேயே வசிப்பதாக கூறி விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது தற்போது குளறுபடியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அரசு உயர் அதிகாரிகளுக்கு தெரியாமலேயே கீழ்நிலை அலுவலர்கள் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் சேர்ந்து குளறுபடியில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN