Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச)
ஏமாற்றி, வஞ்சித்து வந்த கம்யூனிஸ்டுகளை வேரோடும் வேரடி மண்ணோடும் கேரள மக்கள் பிடுங்கி தூக்கி எறிந்திருக்கின்றனர் என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி போனது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை. தங்களின் துருப்பிடித்த கொள்கைகளால் மக்களை ஏமாற்றி, வஞ்சித்து வந்த கம்யூனிஸ்டுகளை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி தூக்கியெறிந்திருக்கின்றனர் கேரள மக்கள். பல்லாண்டு காலமாக கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் கோலோச்சிக்கொண்டிருந்த கம்யூனிஸ்ட்களை வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்திருக்கிறது பாஜக.
ஒருபுறம் அதானி, அம்பானிகளை வசைபாடிக் கொண்டே, மறுபுறம் தாங்கள் ஆளும் கேரளாவில் அதே அதானி, அம்பானிகளுக்கு வெண்சாமரம் வீசுவது, தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள் என்று புலம்பிக்கொண்டே, தங்கக் கடத்தலில் ஈடுபடுவது, இந்திய பங்கு சந்தையை விமர்சித்துக் கொண்டே, வெளிநாட்டு மசாலா பங்குகளை பெற்று பண மோசடியில் ஈடுபடுவது, ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டே, அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது, சமத்துவம் என்று பேசிக் கொண்டே, கொள்கை எதிரிகளை படுகொலைகள் பல செய்து வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றுவது என இரட்டை வேடம் போட்டு வந்த கம்யூனிஸ்டுகளின் கோர வெறியாட்டதிற்கு முடிவுரை எழுதியுள்ளனர் கேரள மக்கள்.
திரிபுரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களையடுத்து கொஞ்சநஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த கம்யூனிஸ்டுகளின் மூச்சுக் காற்றை, நச்சுக் காற்றை உள்ளாட்சி தேர்தலில் விரட்டியடித்து விட்டார்கள் கேரள மக்கள்.
இந்தியாவில் கம்யூனிஸம் எனும் நோய்க்கிருமி முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி இந்தியாவிற்கு, இந்தியர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உறுதி என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ