Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 14 டிசம்பர் (ஹி.ச.)
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையை தெரிந்துகொள்வது என்பது தற்போதைய காலக்கட்டத்தில் அவசியமான ஒன்றாகும். நம் முன்னோர்கள் மருத்துவம், கட்டிடக்கலை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றில் தலைசிறந்து விளங்கியுள்ளனர் என்று அவர்கள் விட்டுச்சென்ற தொல்பொருள் எச்சங்கள் மூலம் நம்மால் உணர முடிகிறது. இப்படி தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த நாகரிகங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அகழ்வாராய்ச்சி என்பது மண்ணின் அடியில் புதைந்துள்ள பண்டைய காலப் பொருட்கள், கட்டிடங்கள் போன்றவற்றை கண்டறிந்து அவற்றின் காலத்தை, தொன்மையை ஆராய்வதாகும். இதில், கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் தமிழ்நாட்டின் தொன்மை நாகரிகத்தை வெளிக்கொணர்ந்துள்ளது. இதனால், சமீப காலங்களில் அகழ்வாராய்ச்சி மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வை பெற்றுள்ளது.
இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization), நைல் நாகரிகம் (Nile Civilization), எகிப்து நாகரிகம், மொகெஞ்சதாரோ, மெசபடோமியா போன்ற நாகரிகங்கள் ஆற்றங்கரையோரம் செழித்த பழமையான நாகரிகமாகும். ஆனால், இவற்றுக்கெல்லாம் முந்தைய நாகரிகமாக பொருநை நாகரிகம் திகழ்கிறது.
பொருநை நாகரிகம் என்பது தாமிரபரணி ஆற்றங்கரையில், குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில் செழித்து வளர்ந்த பண்டைய தமிழர்களின் நாகரிகமாகும். இவை கீழடி, வைகை நாகரிகத்தை விட மிகப்பழமையானதாகும். தமிழர்களின் தொன்மை மற்றும் பண்டைய கால வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்துகொள்ள இந்த நாகரிகம் பெரும் உதவியாக உள்ளது.
இதில், தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடந்த தொல்லியல் ஆராய்ச்சியில், 5,345 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களிடம் இரும்பு பயன்பாடு இருந்ததை கண்டறிந்துள்ளனர். இதனால் தான் இந்தியாவின் வரலாறு தென்னகத்தில் இருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வறிஞர் வின்சென்ட் ஸ்மித் கூறியிருந்தார்.
இவரது வார்த்தைக்கு உயிரூட்டும் வகையில், இந்திய துணை கண்டத்தின் வரலாறு தென்னகத்தில் இருந்துதான் எழுத வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 சட்டப்பேரவையில் பெருமையோடு தெரிவித்தார். அதோடு, தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் விதமாக திருநெல்வேலி மாவட்டத்தில் ’பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும்’ என அறிவித்தார்.
பொருநை என்பது தமிழ்நாட்டின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதியின் ஆதி பெயராகும். திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பொருநை ஆறு, தூத்துக்குடி மாவட்டம் வழியாக கடலில் கலக்கிறது. இந்த பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தை அறிந்து கொள்ள தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை மற்றும் திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி ஆகிய நான்கு இடங்களில் அகழ்வாராச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில், ஆதிச்சநல்லூரில் கடந்த 1904 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா என்பவர் ஆய்வுகள் மேற்கொண்டார். அதன் பின்னர், கடந்த 2004 காலகட்டத்தில் சென்னை மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்த சத்யமூர்த்தி தலைமையிலான குழு ஆய்வு செய்தது. இதில், சுமார் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று அடுக்குகள் கொண்ட முதுமக்கள் தாழிகளும் (Jar burial ), எலும்புக் கூடுகளும் கண்டெடுக்கப்பட்டன.
அதேபோல், சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வவில் முதுமக்கள் தாழிகளும், கறுப்பு சிவப்பு பானைகளும் கண்டெடுக்கப்பட்டன. இங்கு கண்டெடுத்த நெல் மணி ஒன்றை அமெரிக்காவின் புகழ்பெற்ற Beta Analytical Laboratory-ல் வைத்து சோதித்தபோது அதன் காலம் கி.மு. 1,155 எனத் தெரியவந்தது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் ’ஆதன்’ என்ற பெயர் இடம்பெற்றதன் மூலம் சிவகளை மக்கள் எழுத்தறிவுடன் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
கொற்கை, தாமிரபரணி ஆற்றின் வடக்கே முத்துக்குளிக்கும் பழங்காலத் துறைமுக நகரமாகும். தமிழ்நாடு தொல்லியல் துறை உருவான பிறகு முதல் முதலாக கொற்கையில் தான் அகழாய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. 1968 - 1969ஆம் ஆண்டு காலகட்டத்தில் இங்கு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், கொற்கை 2,800 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதும், மிகப்பெரிய வணிகத்தலமாக இருந்ததும், பாண்டிய மன்னனின் தலைநகரம் எனவும் உறுதிப்படுத்தப்பட்டது.
இவ்வாறு இந்த மூன்று இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம், இந்தியாவின் வரவலாறு தாமிரபரணியான பொருநையில் இருந்துதான் தொடங்குகிறது என்பது உலகின் பார்வைக்குத் தெரிய ஆரம்பித்தது. மேலும், இந்த 3 பகுதிகளில் இருந்து முதுமக்கள் தாலி, நாணயம், பானை, ஏடுகள் போன்ற ஏறத்தாழ 2 ஆயிரத்திகும் அதிகமான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்படி அகழ்வாய்வுகளின் போது கண்டறியப்பட்ட பொருட்களை வைக்க திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் பிரமாண்டபமாக உருவாகி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி இரட்டை மலை அருகே பொருநை அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். மொத்தம் 13.2 ஏக்கர் பரப்பளவில், 54 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்படும் இந்த அருங்காட்சிகத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது முடிவுற்றுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இப்படி பிரமிக்க வைக்கும் பொருநை அருங்காட்சியக பணிகளை பார்வையிட ஈடிவி பாரத் ஊடக குழு அங்கு சென்றது. அப்போது நெடுஞ்சாலையோரம், இரட்டை மலைக்கு மிக அருகிலேயே அருங்காட்சியகம் பார்ப்பதற்கு பாகுபலி அரண்மனை போன்று பிரமாண்டபமாக காட்சியளித்தது. கட்டுமானப் பணிகள் முடிவுற்ற நிலையில் தொல்பொருள் எச்சங்களை நவீன தொழில் நுட்பத்துடன் காட்சிப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.
அருங்காட்சிய வளாகம் முழுவதும் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புற்கள் மற்றும் வண்ண மலர்கள் நிறைந்திருந்தது. உள்ளே சென்றபோது மேற்கூறிய நான்கு இடங்களில் இருந்து தொல்பொருட்கள் பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டது. அதனை தொல்லியல் ஆய்வாளர்கள் சுத்தப்படுத்தி கொண்டிருத்தனர். இதில், சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் மக்கள் பயன்படுத்திய இரும்பு பொருட்கள், சலங்கையில் இருக்கும் மணி, மோதிரம் போன்ற பொருட்களை நம்மால் காண முடிந்தது.
இதுகுறித்து தொல்லியல் துறை துணை இயக்கநர் யாதேஷ் குமாரிடம் கேட்டபோது,
பொருநை அருங்காட்சியகத்தை திறப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இங்கு முழுவதும் தமிழ்நாட்டின் கட்டிட கலையை பயன்படுத்தியுள்ளோம். இதில், குழந்தைகளை கவரும் வகையில் தொழில்நுட்ப உதவியுடன் தொல்பொருட்கள் நேரடி டெமோ (live demo) செய்ய உள்ளோம். மேலும், அகழ்வாராய்ச்சி பணிகள், முன்னோர்களின் வணிகம், விவசாயம் போன்றவை குறித்து காட்சிப்படுத்த 3D மற்றும் 5D திரையரங்குகள் வர உள்ளது” என்றார்.
பொருநை அருங்காட்சியகம் குறித்து தொல்லியல் மாணவி மீனா கூறுகையில், “ஒரு அருங்காட்சியகம் நூறு நூலகங்களுக்கு சமம். தெற்கு பகுதியில் அருங்காட்சியகம் இல்லாதது ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமில்லாமல், தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. அருங்காட்சியகம் என்றால் கீழடிக்குதான் செல்ல வேண்டும். ஆனால், இதன் பின்னர் நமக்கு இருக்கும் சந்தேககங்களை இங்கு வந்து தெரிந்து கொள்ளலாம்.
தற்போது பொருநை நாகரிகம் பேசப்படுவதற்கு முக்கிய காரணம் சிவகளை அகழ்வாராய்ச்சி. சுமார் 5,345 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு இரும்பு தொழிற்சாலை இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. அகழ்வாராய்ச்சி அறிக்கையை தெரிந்து கொள்ள, பொதுமக்களுக்கு குறைந்தபட்ச தொல்லியல் சார்ந்த அறிவு இருக்க வேண்டும். ஆனால், அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை வைத்து, நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அவர்களின் சிறப்பு என்ன? போன்ற விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். எனவே, இந்த அருங்காட்சியகம் திறக்கப்படுவது முகுந்த ஆர்வமாக உள்ளது” என்றார்.
தொடர்ந்து, மனோன்மணியம் பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் மதியழகன் கூறுகையில், “ அருங்காட்சியகம் என்பது வெறும் காட்சி பொருள் கிடையாது. முன்னோர்களின் முகவரியை எடுத்துக் காட்டும் காட்சி பெட்டகம். இங்கு முன்னோர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள முடியும். மக்கள் எப்படி வீரத்தோடும், செல்வ செழிப்போடும் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடியும். சிவகளையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள இரும்பு பயன்பாடு உலகிலையே முதல் இரும்பு பயன்பாடாகும்.
கீழடிக்கு பின்பு தான் மக்களிடம் தொல்லியல் விழிப்புணர்வு வந்துள்ளது. அதனால் தான் தற்போது அதிகளவு அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது. வட தமிழகத்தை விட தென் தமிழகத்தில் தான் நிறைய தொல்லியல் சான்றுகள் கிடைக்கிறது. பாண்டியர்கள் மிகச்சிறந்த வரலாற்றை கட்டமைத்துள்ளனர்.
சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை போன்ற அகழ்வாய்வுகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். வீரத்துக்காக தமிழ் மக்கள் உயிரையே கொடுக்கும் அளவுக்கு வாழ்ந்திருப்பது தெரியவருகிறது என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN