Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 14 டிசம்பர் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் அருண்குமார் (31). இவர் சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் பணியாற்றியபோது அப்பகுதியைச் சேர்ந்த இளவரசி (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனன்யா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தற்போது சாத்தூர் என்.ஜி.ஓ காலனியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை வேலை முடித்துவிட்டு அருண்குமார் வீட்டுக்கு சென்றபோது, கதவு பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால் அருண்குமார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இளவரசி வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். மற்றொரு அறையில் செல்போனை கையில் வைத்து குழந்தை விளையாடிக்கொண்டு இருந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சாத்தூர் டவுன் காவல் நிலைய போலீசார், இளவரசி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துகொண்ட இளவரசி தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில், அதில் நான் செல்கிறேன்... குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்... நன்றாக படிக்க வையுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த இளவரசியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 100-க்கும்மேற்பட்டோர் நேற்று காலை விருதுநகர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இளவரசி கொலை செய்யப்பட்டார் என்றும், அவரை அடித்து கொலை செய்த எஸ்.ஐ அருண்குமாரை கைது செய்யக் கோரியும் அரசு மருத்துவமனை சந்திப்பு பகுதியில் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலில் ஈடுபட்டவர்களுடன் டிஎஸ்பி யோகேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். மறியலை கைவிட இளவரசியின் உறவினர்கள் மறுத்ததால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்து வேனில் ஏற்றினர். இளவரசி இறப்பு குறித்து சாத்தூர் கோட்டாட்சியர் கனகராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
மறியலில் ஈடுபட்ட இளவரசியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறுகையில், கார் வாங்க வேண்டும் என பணம் கேட்டு கொடுமைப்படுத்திய அருண் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்து நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN