Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 14 டிசம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று(டிச 14) திமுக இளைஞர் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறுகிறது. திருவண்ணாமலை அருகே உள்ள மலப்பாம்படியில் உள்ள கலைஞர் திடலில் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறுகிறது.
இன்று மாலை 4 மணியளவில் தொடங்கும் இந்த நிகழ்ச்சிக்கு திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., கனிமொழி கருணாநிதி உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சி உரை நிகழ்த்துகிறார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க திருவண்ணாமலை வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான மேல்செங்கத்தில் அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.
1.30 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்படுள்ளன. நிகழ்ச்சிக்காக பிரமாண்ட அளவில் மேடை அலங்காரம் செய்யப்பட்டு அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் படம் வைக்கப்பட்டுள்ளன.
இன்று நடைபெறும் வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்திற்கு 17 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். சுமார் 3 ஆயிரம் வாகனங்கள் பார்க்கிங் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2 லட்சம் பேர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் நிர்வாகிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தண்ணீர் பாட்டில், குளிர்பானம், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கூட்ட நெரிசல் இன்றி வந்து செல்ல புதிதாக இரண்டு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b