Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 14 டிசம்பர் (ஹி.ச)
நடிகர் விஜய் தலைமையேற்று நடத்தி வரும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருச்செங்கோட்டில் இன்று (டிச 14) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தவெக பிரச்சார பொதுச் செயலாளரான அருண் ராஜ், மாவட்ட செயலாளர்கள் செந்தில்நாதன், சதீஸ், பிரதீப் உள்பட கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது,
ஒவ்வொரு தொகுதியிலும் தலைவரின் அறிவுறுத்தலின்படி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று சோழிங்கநல்லூர், இன்று திருச்செங்கோட்டில் நடைபெறுகிறது.
இங்கே நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். தவெகவின் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மட்டும் தான் அறிவிப்பார். ஊடகவியலாளர்கள் தயவு செய்து எதையாவது ஒன்றை போட்டுவிடாதீர்கள். வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் தவெக தலைவர் விஜய் முதல்வராக வருவார்.
தவெக தலைவர் விஜய்யை முதல்வராக அமர வைக்கும் வேலையை செங்கோட்டையன் செய்வார். செங்கோட்டையன் சொல்வதை நாங்கள் செய்வோம். எந்த கட்சியாவது எங்களைப்போல் மாநாடு நடத்த முடியுமா. மற்ற கட்சிகள் எல்லாம் ரூ.200, ரூ.300 கொடுத்து தான் கூட்டம் கூட்ட வேண்டும். ஆனால் விஜய் வருகிறார் என சொன்னால் கூட்டம் தானாக வந்து சேரும்.
ஈரோட்டில் வரும் 18-ம் தேதி தவெக கூட்டம் நடைபெற உள்ளது. அன்று செங்கோட்டையன் கலக்குவார். மக்கள் தவெகவுக்கு ஓட்டுப்போட தயார். செங்கோட்டையன் தன்னிடம் பலர் செல்ஃபி எடுப்பதாக மேடையில் கூறினார். அதற்கு தலைவர் விஜய் தான் காரணம். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தலைவர் விஜய் தான் வேட்பாளர்.
அனைத்து தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறுவதற்கு அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். தலைவர் விஜய் உச்சத்தை விட்டுட்டு வந்துள்ளார். தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என உச்சத்தை விட்டுட்டு வந்துள்ளார்.
தமிழகத்தில் புயல் என எந்த பாதிப்பு வந்தாலும் தவெக பாடுபடும். தமிழகம் இக்கட்டான சூழலில் உள்ளது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து ஏமாற்றி விட்டார்கள் என மக்கள் நினைக்கின்றனர். அதன் வெளிப்பாடு தான் இங்கு கூடியுள்ள கூட்டம்.
யாருக்காவது தைரியம் இருந்தால் கூட்டம் போடுங்கள், அனைவரும் வாருங்கள் என சொல்லுங்கள் வருவார்களாக என பார்ப்போம்.
ஆனால் தவெக தலைவர் விஜய் வந்தால் கூட்டம் தானாக வந்துவிடும். மின் கட்டண உயர்வால் விசைத்தறிக் கூடங்கள் மூடுவிழா கண்டுவிட்டது.
கூடிய விரைவில் தவெகவுக்கு அருமையான சின்னம் வழங்கப்பட உள்ளது.
சின்னம் வந்த 15 நிமிடத்தில் உலகப் புகழ் பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b