Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச)
சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ள, 50வது இந்தியா சுற்றுலா மற்றும் தொழில்துறை கண்காட்சிக்கான டெண்டர் நடைமுறைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை, ஜனவரி 19ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில், அடுத்தாண்டு 50வது இந்தியா சுற்றுலா மற்றும் தொழில் துறை கண்காட்சி நடக்க உள்ளது. இந்த கண்காட்சிக்கான டெண்டரில், பெங்களூருவைச் சேர்ந்த 'பன் வேர்ல்ட் அண்ட் ரிசார்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனமும் விண்ணப்பித்தது. ஆனால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, பன் வேர்ல்ட் அண்ட் ரிசார்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டெண்டர் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், டெண்டர் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வெளிப்படையான முறையில் டெண்டர் நடத்தப்படவில்லை. உரிய தகுதி இருந்தும், விண்ணப்பத்தை நிராகரித்ததற்கு எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, டெண்டர் நடைமுறைகளை மேற்கொள்ள விதிக்கப்பட்ட இடைக்கால தடையை, ஜனவரி 19ம் தேதி வரை நீட்டித்த நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ