Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 14 டிசம்பர் (ஹி.ச)
திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (டிச 14) மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ளது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார்.
இதற்காக முதல்வர் ஸ்டாலின் தற்போது திருவண்ணாமலை வருகை தந்துள்ளார்.
திருவண்ணாமலைக்கு வருகை தந்த முதல்வருக்கு மாவட்ட எல்லையான மேல்செங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மேளதாளங்கள் முழங்க, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியையொட்டி மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் கட்சி கொடிகளால் அலங்காரங்களும், மின்னொளி அலங்காரங்களும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இந்நிகழ்ச்சிக்காக பிரமாண்ட அளவில்
மேடை அலங்காரம் செய்யப்பட்டு இதில் பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உருவ படங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சி திடலுக்கு செல்லும் வழியில் பிரமாண்டமாக வரவேற்பு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
மண்டலங்கள் வாரியாக நடைபெறும் இந்த தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மண்டலத்தில் இருந்து தொடங்கப்பட்டு அதுவும் திருவண்ணாமலையில் முதலில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b