Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 14 டிசம்பர் (ஹி.ச.)
ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலியம் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நடவடிக்கையால் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவுடன் அதிக நெருக்கத்தை இந்தியா காட்டி வருகிறது.
இதன் காரணமாக, அதிபர் டிரம்ப்பின் வரிவிதிப்பு முடிவுக்கு சொந்த நாட்டிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்க பார்லி உறுப்பினர்கள் வெளிப்படையாக டிரம்ப்பின் முடிவை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரியை விதிக்கும் அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய தீர்மானத்தை அந்நாட்டு பார்லி உறுப்பினர்கள் டெபோரா ரோஸ், மார்க் வீசி, ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொண்டு வந்துள்ளனர்.
வட கரோலினா, வட டெக்ஸான் உள்ளிட்ட அமெரிக்க மாகாணங்கள் இந்தியாவுடன் கலாசார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் தொடர்புடையவை.
டிரம்ப்பின் வரி விதிப்பால், இந்த மாகாணங்களில் வசிக்கும் மக்கள் விலைவாசி உயர்வு, வர்த்தக பாதிப்பு போன்றவையால் அதிகம் பாதிக்கின்றனர்.
இந்தியா - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது;
அமெரிக்க நலன்களையோ பாதுகாப்பையோ முன்னேற்றுவதற்குப் பதிலாக, இந்த வரிகள் எதிர் விளைவுகளை உண்டாக்குகின்றன. விநியோக சங்கிலிகளைச் சீர்குலைக்கின்றன. அமெரிக்க தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
மக்களுக்கான செலவுகளை அதிகரிக்கின்றன. இந்தப் பிரச்னையில் தீர்வு காணப்பட்டால், அமெரிக்கா-இந்தியா பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும்.
இவ்வாறு கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM