Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 14 டிசம்பர் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 7,347 அடி உயரத்தில் உள்ள ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் உறைபனி ஏற்படும். நீர்பனி தொடங்கிய அடுத்த ஒரு சில வாரங்களில் உறைபனி தொடங்கும்.
கடந்த டிச 12 ஆம் தேதி முதல் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில இடங்களில் உறைபனி தொடங்கியது. அரசு தாவரவியல் பூங்காவில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
நேற்று (டிச 13) ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் 2 டிகிரி செல்சியஸ் ஆகவும், காந்தல் மற்றும் தலைக்குந்தா பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் ஆகவும், மஞ்சூரை அடுத்த அவலாஞ்சி பகுதியில் மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவானது.இதன் காரணமாக ஊட்டி நகரில் குதிரை பந்தய மைதானம், காந்தல், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி நிலவியது.
அதே போல் இன்றும் (டிச 14) தொடரும் கடும் குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் நிலவும் கடும் குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் தங்கள் தங்கியுள்ள ஹோட்டல்களிலேயே முடங்கியுள்ளனர். கடைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதுகுறித்து உள்ளூர்வாசிகள் கூறுகையில்,
ஊட்டி தலைக்குந்தா பகுதியில் உறை பனி பொழிவின் தொடக்கத்திலேயே இந்த முறை வழக்கத்தைவிட மிக அதிகமாகக் காணப்படுவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அதிகாலை நேரத்தில் வேலைக்குச் செல்லமுடியாமல் கடும் குளிர் இருப்பதால், காலை 10 மணிக்கு மேல் உறை பனியின் தாக்கம் குறைந்தவுடன்தான் பணிகளை தொடர முடிகிறது.
இருந்தாலும் கேரட் அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். தாமதமாக தொடங்கியதால் இந்த ஆண்டு உறை பனி தாக்கம் அதிகமாக இருக்கும், அடுத்த ஒருசில வாரங்களில் தேயிலைச் செடிகள் கருகிவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b