Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி , 14 டிசம்பர் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா மற்றும் ஆலயம் அடிக்கல் நாட்டிய 125-வது ஆண்டு பெருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலியும் காலை 6.15 மணிக்கு திருப்பலியும் 8.30 மணிக்கு திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும் 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலியும் நடைபெற்றன. மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி போன்றவை நடைபெற்றன.
விழாவின் 9-ம் நாளான நேற்று (டிச 13) இரவு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை திருப்பலி நடத்தி மறையுறை ஆற்றினார். பின்னர் வாணவேடிக்கை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சூசையப்பர் தங்கத்தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான மக்கள்பங்கேற்றனர்.
10-ம் திருவிழாவான இன்று (டிச 14) அதிகாலை 4.30 மணிக்கு தங்கத் தேர் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தையர்கள் தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார்கள். காலை 6 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி நடைபெற்றது. இதில் சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார்.
காலை 8 மணிக்கு நடந்த ஆங்கில திருப்பலியில் கன்னியாகுமரி காசா கிளாரட் கிளரீசியன்அருட் தந்தையர்கள் தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார்கள். அதைத்தொடர்ந்து மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரண்டு தங்க தேர்ப்பவனி நடைபெற்றது.
பின்னர் 10.30 மணிக்கு நடைபெற்ற மலையாள திருப்பலியில் கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி பியாரிஸ்ட் அருட்தந்தையர்கள் தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார்கள். பகல் 12 மணிக்கு தமிழில் நடைபெற்ற திருப்பலியில் வடசேரி பங்குத்தந்தை அருட்பணி புருனோ தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார். மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெற்ற உள்ளது. இரவு 8 மணிக்கு இன்னிசைக் கச்சேரி நடைபெற்ற உள்ளது.
இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல பங்குத்தந்தை அருட்பணியாளர் உபால்டு மரியதாசன், பங்குப் பேரவை துணைத்தலைவர் எப்.டாலன்டிவோட்டா, செயலாளர் கே.ஸ்டார்வின், பொருளாளர் ஜி.ரூபன், துணை செயலாளர் பி.டெமிஸ்டோ இணை பங்குதந்தையர்கள் மற்றும் பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள், பங்குமக்கள் செய்திருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b