Enter your Email Address to subscribe to our newsletters

தர்மசாலா, 15 டிசம்பர் (ஹி.ச.)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 117 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக கேப்டன் மார்கரம் 61 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் - அபிஷேக் சர்மா களமிறங்கினர்.
இன்னிங்சின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அபிஷேக் சர்மா அதிரடியாக தொடங்கினார். மறுமுனையில் சுப்மன் கில் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.
வெறும் 4.1 ஓவர்களிலேயே இந்திய அணி 50 ரன்களை கடந்து அசத்தியது. முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவர்களில் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. அபிஷேக் சர்மா 35 ரன்களில் (18 பந்துகள்) ஆட்டமிழந்தார். அடுத்து திலக் வர்மா களமிறங்கினார்.
முந்தைய போட்டிகளில் சொதப்பிய சுப்மன் கில் இந்த ஆட்டத்தில் பொறுப்பாக ஆடினார். திலக் வர்மா , கில் இணைந்து நிலைத்து விளையாடினர். கில் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் அடித்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அத்துடன் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM