Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 15 டிசம்பர் (ஹி.ச.)
விழிப்புணர்வு கல்வி, நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித ஒற்றுமை குறித்த முக்கிய ஆலோசனை
ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு, விழிப்புணர்வு கல்வி, நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித ஒற்றுமை ஆகியவற்றின் எதிர்காலம் குறித்த ஒரு உயர்மட்ட சர்வதேச கலந்துரையாடல் ஆரோவில்லில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மூத்த அரசுத் தலைவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆரோவில்லின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து விவாதித்தனர்.
ஆரோவில் பவுண்டேஷன் செயலரும், குஜராத் அரசின் கூடுதல் தலைமைச் செயலருமான டாக்டர் ஜெயந்தி ரவி இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் இயக்குனர் மற்றும் தலைவர் திருமதி. மிகிகோ டனகா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனித மேம்பாடு சார்ந்த உலகளாவிய உரையாடல்களில் ஆரோவில்லின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை இக்கூட்டம் உறுதிப்படுத்தியது.
இந்நிகழ்வில் மியான்மர் நாட்டின் கௌரவத் தூதர் பேராசிரியர் ஜே. ரங்கநாதன், தக்ஷஷீலா பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் விவேக் இந்தர் கோச்சர், இராவண செல்வம் (தக்ஷஷீலா பல்கலைக்கழகம்), டாக்டர் சஞ்சீவ் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்தச் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் 'ஆரோவில் இலக்கியத் திருவிழாவில்' பங்கேற்பதற்காகவும் அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் ஆரோவில்லின் நகர மேம்பாட்டுக் குழு ஜெயா மற்றும் சிந்துஜா), பணிக்குழு ஜோசெபா மற்றும் அருண்), சேர்ப்பு மற்றும் நீக்கப் பரிசீலனைக் குழு ( அன்டிம்), நிதி மற்றும் சொத்து நிர்வாகக் குழு ( சந்த்ரேஷ்) உறுப்பினர்கள் மற்றும் ஆரோவில் பவுண்டேஷன் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
செயற்கை நுண்ணறிவு, நெறிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு தனது உரையில், டிஜிட்டல் மயம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சியால் ஏற்படும் சவால்களைச் சுட்டிக்காட்டிய டாக்டர் ஜெயந்தி ரவி, பள்ளிகளில் முறையான பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தினார். மாணவர்கள் மற்றும் குடிமக்களுக்கு குறித்த அடிப்படை அறிவை வழங்குவதற்காக அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்படும் AI 101 தேசிய சான்றிதழ் திட்டத்தையும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்நுட்பத் திறனுக்கு அப்பால், AI அமைப்புகளில் நெறிமுறைகள், பொறுப்புணர்வு மற்றும் விழிப்புணர்வை ஒருங்கிணைப்பதே இன்றைய காலத்தின் மிக முக்கியத் தேவை என்றும், இன்றைய வடிவமைப்புத் தேர்வுகளே எதிர்கால சமூகத்தின் விளைவுகளைத் தீர்மானிக்கும் என்றும் அவர் அழுத்தமாகக் கூறினார்.
கற்பவரின் உடல், மனம், உணர்வு மற்றும் ஆன்மீக பரிமாணங்களை வளர்க்கும் 'ஒருங்கிணைந்த கல்வி' முறைக்கு ஆரோவில் தனது உறுதியை மீண்டும் வலியுறுத்தியது. கல்வி என்பது வெறும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது அல்ல, மாறாக அது உள்ளுறை ஆற்றலை விழிப்படையச் செய்யும் செயல்முறை என்று விவரிக்கப்பட்டது.
ஸ்ரீ அரவிந்தரின், எதையும் கற்பிக்க முடியாது, ஆனால் அனைத்தையும் விழிப்படையச் செய்ய முடியும் என்ற தத்துவத்தை நினைவுகூரும் வகையில், ஆசிரியர்கள் ஒவ்வொரு குழந்தையின் தனித்துவமான இயல்புக்கு ஏற்ப அவர்கள் வளர்வதற்கான சூழலை உருவாக்கும் வழிகாட்டிகளாகவும், உற்றுநோக்குபவர்களாகவும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தேர்வுகளுக்கு அப்பாற்பட்ட மதிப்பீடு
தேர்வு மையக் கல்வி முறைக்கு மாற்றாக, சுய மதிப்பீடு, சிந்தனை மற்றும் அனுபவக் கல்வி ஆகியவை அர்த்தமுள்ள மாற்றுகளாக முன்வைக்கப்பட்டன. மாணவர்களின் ஆழமான வளர்ச்சி, நோக்கம் மற்றும் லட்சியங்களைப் புரிந்துகொள்ள, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான நெருக்கமான ஈடுபாடும் நீண்டகால கவனிப்பும் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.
அன்னையின் கனவு மற்றும் ஆரோவில் நகரத் திட்டம் மனித ஒற்றுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு வாழ்வு ஆகியவற்றிற்கான அன்னையின் கனவுத் திட்டமான 'கேலக்ஸி மாஸ்டர் பிளான்' குறித்தும் விவாதிக்கப்பட்டது. மண்டல வளர்ச்சி, உள்கட்டமைப்பு முயற்சிகள், ஏரி சீரமைப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும், இந்த நீண்டகாலப் பார்வையை நனவாக்குவதற்கான உத்வேகம் குறித்தும் மறு ஆய்வு செய்யப்பட்டது.
ஒரு 'சர்வதேச நகரமாக'
ஆரோவில்லின் பங்கு மீண்டும் உறுதியளிக்கப்பட்டது. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பங்களிப்பை அதிகரித்தல், அத்துடன் அரசுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடனான ஒத்துழைப்பைத் தொடருதல் அவசியம் என்று பேச்சாளர்கள் அழைப்பு விடுத்தனர்.
முக்கிய இடங்களைப் பார்வையிடல்
வருகையின் ஒரு பகுதியாக, திருமதி. மிகிகோ டனகா, பேராசிரியர் ஜே. ரங்கநாதன் மற்றும் திரு. இராவண செல்வம் ஆகியோர் மாத்ரிமந்திர் சென்று தியானத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆரோவில் ஏரித் திட்டம் , சவுண்ட் கார்டன் மற்றும் பார்வையாளர்கள் மையம் ஆகிய இடங்களைப் பார்வையிட்டு, ஆரோவில்லின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை நேரில் கண்டு பாராட்டினர்.
எதிர்காலத்திற்கான வாழும் ஆய்வுக்கூடம்
கல்வி, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், நிர்வாகம் மற்றும் சமூக வாழ்வு என அனைத்திலும் ஆன்மீகத்தையும் லௌகீக வாழ்வையும் விழிப்புணர்வுடன் ஒருங்கிணைக்கும், மனித குலத்திற்கான ஒரு 'வாழும் ஆய்வுக்கூடமாக'ஆரோவில் திகழ்கிறது என்பதை அங்கீகரிப்பதோடு
இக்கலந்துரையாடல் நிறைவுற்றது.
Hindusthan Samachar / ANANDHAN