Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 டிசம்பர் (ஹி.ச.)
மத்திய அரசுப் பணிக்குப் பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியின அதிகாரிகளை அனுப்பி வைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடா்பாக அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலா்களுக்கு மத்திய பணியாளர் நல அமைச்சகம் அண்மையில் அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பிற மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி (சிவிஓ) பணியிடங்கள், மத்திய பணியாளர் திட்டத்தின் (சிஎஸ்எஸ்) கீழ் உள்ள பணியிடங்களுக்கு மாநில அரசுப் பணிகளில் உள்ள அதிகாரிகளை அனுப்பிவைக்க வேண்டும்.
பதவி உயர்வு அளிப்பதாகத் தெரிவித்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை, மாநிலப் பணிக்கு திரும்ப அழைத்துக் கொள்ளப்பட வாய்ப்பில்லாத அதிகாரிகளை மட்டுமே அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அவ்வாறு அதிகாரிகளை அனுப்பிவைப்பதில் பெண்கள், எஸ்சி/எஸ்டி வகுப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதன் மூலம், மத்திய பணிகளில் அவர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்க முடியும்.
மத்திய பணிகளில் இடம்பெறத் தடை விதிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர்களைப் பரிந்துரைக்க வேண்டாம். வரும் ஜன.1-ஆம் தேதி முதல் சிஎஸ்எஸ்ஸின் கீழ் உள்ள பணியிடங்கள், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பிற மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள சிவிஓ பணி நியமன நடைமுறைகள் பிரத்யேக வலைதளம் மூலம் மேற்கொள்ளப்படும்.
என்று தெரிவிக்கப்பட்டது.
Hindusthan Samachar / JANAKI RAM