வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?
சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.) இந்திய தேர்தல் ஆணையம் (ECI) 2025 ஆம் ஆண்டு தேர்தலுக்காக அனைத்து வாக்காளர் பட்டியல்களையும் புதுப்பிப்பதற்காக சிறப்புத் தீவிர திருத்தப் பணியை (Special Intensive Revision - SIR) மேற்கொள்ளப்பட்டது. தகுதியுள்ள அனைத்து குடிம
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?


சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.)

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) 2025 ஆம் ஆண்டு தேர்தலுக்காக அனைத்து வாக்காளர் பட்டியல்களையும் புதுப்பிப்பதற்காக சிறப்புத் தீவிர திருத்தப் பணியை (Special Intensive Revision - SIR) மேற்கொள்ளப்பட்டது.

தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்வதும், பழைய அல்லது போலி வாக்காளர் அடையாள அட்டைகளை நீக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்போது தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்கும் முறை:

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க, நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இரண்டு முறைகளைப் பயன்படுத்தலாம்:

1. விவரங்களை உள்ளிட்டுத் தேடுவது (Search by Details / Mobile)

இந்த முறை மிகவும் எளிமையானது. நீங்கள் நேரடியாகத் தேர்தல் ஆணையத்தின் தேடல் போர்ட்டலுக்குச் சென்று (Voters' Service Portal / Electoral Search), உங்கள் தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டுத் தேடலாம்.

இதற்கு உங்கள் பெயர், தந்தை/கணவர் பெயர், வயது அல்லது பிறந்த தேதி, மாநிலம், மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.

நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணை உள்ளிட்டு, அதில் வரும் OTP மூலம் லாகின் செய்தும் பார்க்கலாம்.

2. EPIC எண் மூலம் தேடுவது

உங்களிடம் ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை (EPIC Number) இருந்தால், அதைப் பயன்படுத்தி உங்கள் விவரங்களைத் தேடலாம். உங்கள் EPIC எண் மற்றும் நீங்கள் வசிக்கும் மாநிலத்தின் பெயர் இருந்தால் போதும்.

இந்த முறையில், உங்கள் குறிப்பிட்ட பூத் அல்லது வாக்குச் சாவடியின் முழுப் பட்டியலையும் நீங்கள் பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் பெயரை நேரடியாகப் பார்க்கலாம்.

ECI இணையதளத்தில் உள்ள E-Roll PDF பிரிவுக்குச் செல்லவும். உங்கள் மாநிலம், மாவட்டம், சட்டமன்றத் தொகுதி மற்றும் வாக்குச்சாவடி (Polling Station) ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும். வாக்காளர் பட்டியலின் இறுதிப் பதிவை (Final Roll) பிடிஎஃப் (PDF) வடிவில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் பெயரைச் சரிபார்க்கவும்.

சிறப்புத் தீவிர திருத்தப் பணி நடைபெறும் போது, குடிமக்கள் தங்கள் வாக்காளர் விவரங்களைப் புதுப்பிக்க அல்லது புதிய பெயர்களைச் சேர்க்க, குறிப்பிட்ட படிவங்களைப் பயன்படுத்த வேண்டும்.

உதாரணமாக, புதிய வாக்காளராகப் பதிவு செய்ய படிவம் 6 (Form 6) நிரப்பிக் கொடுக்க வேண்டும். தவறுகளைத் திருத்த அல்லது விவரங்களைப் புதுப்பிக்க படிவம் 8 (Form 8) நிரப்பிக் கொடுக்க வேண்டும். பட்டியலில் இருந்து பெயரை நீக்க படிவம் 7 (Form 7)-ஐ நிரப்பிக் கொடுக்க வேண்டும்.

Hindusthan Samachar / JANAKI RAM