சென்னை மாநகராட்சி சார்பில் மெரினாவில் இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் இரவு நேர காப்பகம்
சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.) சென்னையில் மெரினா கடற்கரை முக்கியமான பொழுதுபோக்கு தளமாக திகழ்கிறது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அனைத்து தரப்பட்ட மக்களும் மெரினா கடற்கரையை பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தும் பணியை மாநகரா
சென்னை மாநகராட்சி சார்பில் மெரினாவில் இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் இரவு நேர காப்பகம்


சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.)

சென்னையில் மெரினா கடற்கரை முக்கியமான பொழுதுபோக்கு தளமாக திகழ்கிறது.

இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அனைத்து தரப்பட்ட மக்களும் மெரினா கடற்கரையை பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

இதே போல, சாலையில் பிச்சை எடுப்பவர்கள், வயதானவர்கள், வீடு இல்லாதவர்கள் இரவு நேரங்களில் மெரினா கடற்கரை மணற்பரப்பிலும், உட்புற சாலையின் ஒதுக்குப்புறங்களிலும் தூங்குவார்கள். இதனால், அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்து வந்தது.

இது குறித்து சென்னை மாநகராட்சி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையிலேயே வீடு இல்லாதவர்களுக்கு இரவு நேர காப்பகம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.

அதன்படி, மெரினா கடற்கரை அண்ணா சதுக்கம் அருகில் உள்ள காலியிடத்தில் 2 ஆயிரத்து 400 சதுர அடியில் புதிதாக இரவு நேர காப்பகத்தை மாநகராட்சி கட்டியுள்ளது.

ரூ.86 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் இந்த காப்பகம் கட்டப்பட்டுள்ளது.

தற்போது காப்பகத்தை சுற்றி நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் எழுப்பும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிந்து இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட இருக்கிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெரினா கடற்கரையில் இரவு நேரங்களில் தூங்கும் வீடு இல்லாதவர்களின் நலனை கருத்தில் கொண்டு அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் பின்புறத்திலேயே இரவு நேர காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தில் 80 பேர் வரையில் தங்க முடியும். இவர்களுக்கு பாய், தலையணை, போர்வை உள்ளிட்டவைகள் வழங்கப்படும். கழிவறை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காப்பக பராமரிப்பு பணியை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல, காப்பகத்தில் தங்கும் நபர்களுக்கு இரவு நேர உணவை அம்மா உணவகம் மூலம் வினியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு இந்த காப்பகம் திறந்து வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / JANAKI RAM