Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 15 டிசம்பர் (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் அரியூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயில் உள்ளது. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் 17-ம் தேதி காலை 11 மணிக்கு திருப்பதியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரத்துக்கு வருகிறார். தொடர்ந்து, தங்கக்கோயிலில் உள்ள ஸ்ரீநாராயணி அம்மன், 1,800 கிலோ எடை கொண்ட வெள்ளி விநாயகர், சொர்ணலட்சுமி, பெருமாளை தரிசனம் செய்வதுடன், ஸ்ரீசக்தி அம்மாவிடம் ஆசி பெறுகிறார்.
பின்னர், தங்கக்கோயில் அருகே ஸ்ரீநாராயணி ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார். பகல் 12.30 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
குடியரசுத் தலைவருடன், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வருகின்றனர். குடியரசுத் தலைவர் வேலூருக்கு வருவதையொட்டி மாவட்டம் முழுவதும் வரும் 17-ம் தேதி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஸ்ரீபுரம் தங்கக்கோயிலுக்கு வருவதையொட்டி, தங்கக்கோயில், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகின்றன.
எனவே, வரும் 17-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் எந்த காரணத்துக்காகவும் ட்ரோன்கள் மற்றும் சிவில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b