Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 15 டிசம்பர் (ஹி.ச.)
மதுரை சூர்யா நகர், மீனாட்சியம்மன் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் மயில்வாகன ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஜூலை மாதம் 4-வது குறுக்கு தெரு மற்றும் 11-வது தெற்குத் தெரு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கப்பட்டதாகவும், அவை முழுமையாக முடிக்கப்படாத நிலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு அவையும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டபோதும் உரிய பதில் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால், அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் வாகனங்களில் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில், அந்தப் பகுதியில் உள்ள எம்எல்ஏ ஒருவரின் சொந்தக் கட்டிடம் அமைந்துள்ள சாலையில் மட்டும் அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சாலைகளைச் சீரமைத்து, பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை முழுமையாக முடிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை நீதிபதி விஜயகுமார் விசாரித்தார்.
விசாரணை முடிவில்,
மனுதாரரின் கோரிக்கைகள் தொடர்பாக தற்போதைய நிலை குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.
Hindusthan Samachar / ANANDHAN