கடும் குளிர் காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க 27-வது நாளாக தடை
நெல்லை, 15 டிசம்பர் (ஹி.ச.) நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 1 வாரத்திற்கும் மேலாக குறைந்துவிட்டது. நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்யாமல் வெயில் அடித்து வருகிறது. ஆனால் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. பொதுவாக
Manimuthar Falls


நெல்லை, 15 டிசம்பர் (ஹி.ச.)

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 1 வாரத்திற்கும் மேலாக குறைந்துவிட்டது. நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்யாமல் வெயில் அடித்து வருகிறது. ஆனால் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது.

பொதுவாகவே கார்த்திகை மாதத்தில் தொடங்கி மார்கழி, தை மாதங்கள் வரை பனியின் தாக்கம் இருக்கும் என்ற நிலையில், மார்கழி மாதத்தில் தான் அதிக அளவு குளிர் வாட்டும். ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலும் கடுமையான குளிர் வாட்டி வருகிறது.

இதனால் அதிகாலையில் பணிக்கு செல்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஒரு வாரத்திற்கும் மேலாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து நீடித்து வருகிறது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இன்று 27-வது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

அதேநேரத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாக பெய்வதால் பிரதான அணையான பாபநாசத்திற்கு வினாடிக்கு 466 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் பாசனத்திற்காக 1000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அந்த அணை நீர்மட்டம் 127 அடியாக உள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 106.74 அடியாக உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN