Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 15 டிசம்பர் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமீபத்தில் 2 கைதிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த தொடர் சம்பவங்கள் குறித்து கடந்த வாரம் மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன், பாளையங்கோட்டை சிறையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கடந்த 10-ந்தேதி சிறை கைதிகளான ரசூல், சையது அலி, மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேரும் பல்வேறு காரணங்களுக்காக நாங்குநேரி கிளைச்சிறை, தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறை, நாகர்கோவில் சிறை ஆகியவற்றுக்கு திடீரென மாற்றப்பட்டனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் வைத்து அவர்கள் 3 பேரும் தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்படும் சில்வர் டம்ளரை உடைத்து ஆழமாக தங்களது கைகளை கிழித்துக் கொண்டதாகவும், அவர்களுக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின்னர் நடத்திய விசாரணையில், காவல்துறையினர் தங்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடுவதால் இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதேநேரம், தேவையில்லாத பிரச்சினைகளை தடுக்கும் விதமாக 3 பேரும் வேறு வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்ட நிலையில், வேண்டும் என்றே சிலர் தற்கொலை முயற்சி உள்ளிட்ட தவறான தகவல்களை பரப்புவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே பாளையங்கோட்டை சிறை சர்ச்சைக்குள் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN