Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 2019-ம்ஆண்டு டிச.1-ம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பல கட்ட பேச்சுவார்த்தைக்குபின் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் இறுதி செய்யப்பட்டு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.
இதையடுத்து 2023-ம் ஆண்டு டிச.1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கியிருக்க வேண்டும். எனவே ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பல்வேறு தொழிற்சங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் கடந்த ஜூலை 24-ம் தேதி மின் பகிர்மான நிதி இயக்குநர் மலர்விழி தலைமையிலான ஊதிய திருத்த குழுவுடன் முதல்கட்ட ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 19 தொழிற்சங்கங்களைச் சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் அனைத்து பணியாளர்களுக்கும் அடிப்படை சம்பளத்தில் 25 சதவீதம் உயர்த்தி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கள உதவியாளர், கணக்கீட்டாளர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும். உரிய முறையில் சர்வீஸ் வெயிட்டேஜ் வழங்க வேண்டும்.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நிறைவுபெற்று ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் வரை இடைக்கால நிவாரணமாக மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் 2-ம் கட்ட ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நாளை (டிசம்பர் 16) மின்வாரிய தலைமையகத்தில் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழிற்சங்கங்க பிரிதிநிதிகள் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b