Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 15 டிசம்பர் (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ‘மதவெறியை மாய்ப்போம் மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் பிரச்சார நடைபயணம் நடைபெற்றது.
முன்னதாக, இதன் தொடக்க நிகழ்ச்சி தரங்கம்பாடியை அடுத்த தில்லையாடியில் நடைப்பெற்றது.
நடைபயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்,
மதவெறியை தூண்டும் பாஜக, ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக இந்த பேரணி நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள இயற்கை வளங்களை பெரு முதலாளிகளும், தொழிலதிபர்களும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு எல்லாம் இயற்கை வளங்களை பாஜக தாரை வார்த்து கொடுக்கிறது. 2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் தொகை ரூ.4.50 லட்சம் கோடி. இந்த பட்ஜெட் 8 கோடி மக்களுக்கானது.
ஆனால், நாட்டின் இயற்கை வளங்களை சுரண்டி, அதானி ரூ. 11 லட்சம் கோடி மதிப்பிலான சொத்து மதிப்பு வைத்துள்ளதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி என அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சாமுவேல்ராஜ்,
பண்ணையார்களுக்கு எதிராக மக்களை திரட்டி போராடிய மண், இந்த மயிலாடுதுறை மண். அப்படிப்பட்ட இந்த மண்ணில் சாதி வெறியர்களும், மத வெறியர்களும் இன்று மக்களை பிளவுபடுத்துகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டிற்கு வந்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், திருப்பரங்குன்றம் பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்துவோம் என்கிறார். பாஜக தலைவர்கள் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்கிறார்கள்.
அயோத்தி வடக்கில் இருக்கிறது. திருப்பரங்குன்றம் தென் மண்ணில் இருக்கிறது. திருப்பரங்குன்றத்தை ஒருபோதும் அயோத்தியை போல மாற்ற முடியாது என்பதை தமிழ் மக்கள் பாஜகவிற்கு உணர்த்துவார்கள். தமிழக மக்களின்உரிமைகள், மாநில உரிமைகளை பறித்த பாஜக, தற்போது திருப்பரங்குன்ற பிரச்சனையை மையப்படுத்தி மக்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். அதனை எதிர்த்து தமிழ்நாட்டு மக்கள் முறியடிப்பார்கள்.
நூறாண்டுகளாக திருப்பரங்குன்றத்தில் வழிபாடு நடக்கிறது. உச்சி பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுகிறார்கள்.
இப்போது கூறும் தீபத்தூண் என்ற இடம் மலைகுன்றிலேயே இல்லை. மக்கள் மத்தியில் பாஜகவினர் தவறான சித்திரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN