Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.)
வந்தே மாதரம் பாடலின் 150-ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கட்டுரைப் போட்டி நடத்தப்பட உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வங்க கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தேசிய பாடலான வந்தே மாதரம் இந்தியாவின் ஒற்றுமை, கலாச்சார பெருமை மற்றும் சுதந்திர போராட்டத்தை ஊக்குவித்த தியாக உணர்வின் சக்தி வாய்ந்த சின்னமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் தற்போது, 150 ஆண்டுகளை கடந்திருக்கிறது. இந்த முக்கியமான மைல்கல்லை போற்றும் வகையிலும், கொண்டாடும் விதமாகவும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இப்போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படும். மாணவர்கள் தங்களது கட்டுரைகளை கைப்பட தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதி ஏதாவது ஒரு பிரிவில் சமர்ப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் 10 பக்கங்களுக்கும், கல்லூரி மாணவர்கள் 15 பக்கங்களுக்கும் மிகாமல் கட்டுரைகளை எழுத வேண்டும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு பெறுபவருக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டாம் பரிசு பெறுபவருக்கு ரூ.30 ஆயிரமும், மூன்றாம் பரிசு பெறுபவருக்கு ரூ.25 ஆயிரமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
அதற்கேற்ப போட்டிகள் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்காக ‘இந்திய சுதந்திர போராட்டத்தில் வந்தே மாதரத்தின் பங்களிப்பு’, என்ற தலைப்பிலும், 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக ‘வந்தே மாதரம் பாடலால் விழித்தெழுந்த பாரதம்’ என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்காக ‘2047-ல் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் வந்தே மாதரம் பாடலின் பங்கு’ என்ற தலைப்பிலும் நடத்தப்படும்.
எழுதிய கட்டுரைகளை ‘ஆளுநரின் துணை செயலர், ஆளுநர் மாளிகை, சென்னை - 600022’ என்ற முகவரிக்கு வரும் ஜன.31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b