Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை திருவான்மியூர், மருந்தீஸ்வரர் நகர், சிவகாமிபுரத்தில் கடந்த 50 ஆண்டுகளாக அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோயில் அருகில் மழைநீர் கால்வாய் இருப்பதாக கூறி, விஸ்வநாதன் என்ற தனிநபர் கொடுத்த வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதன்படி அக்கோயிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், அதன்பேரில் அக்கோயிலை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க உள்ளதாகவும் நேற்றிரவு (டிசம்பர் 14) கோயில் நிர்வாகத்தினருக்கு காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சிவகாமிபுரத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலின் முன்பு, இன்று (டிசம்பர் 15) காலை கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட மக்கள் சாலையில் கண்டன பதாகைகளுடன் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இப்பகுதி மக்களின் தர்ணா போராட்டத்துக்கு முன்னாள் மாநகராட்சி மேயர் கராத்தே
தியாகராஜன் ஆதரவு தெரிவித்து, அப்பகுதி மக்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் மாநகராட்சி துணை பொறியாளர் கண்மணி, 13வது மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் விரைந்து வந்தனர். அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கோயில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாநகராட்சி அதிகாரிகளிடம், நீதிமன்றம் வழங்கிய முறையான உத்தரவை கொடுக்க வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் உள்பட அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள், தங்களுக்கு வாய்மொழி உத்தரவு மட்டுமே இருப்பதாக தெரிவித்து, அப்பகுதி மக்களை கலைந்து போகச் சொல்லி அறிவுறுத்தினர்.
எனினும், அப்பகுதி மக்கள் ‘இங்குள்ள வரசித்தி விநாயகர் கோயிலை இடிக்க மாட்டோம் என்று மாநகராட்சி சார்பில் உறுதியளிக்காமல் இங்கிருந்து செல்ல மாட்டோம்’ எனக் கூறி தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதைத் தொடர்ந்து, இன்று மாலை 5 மணியளவில் இப்பகுதி மக்களுடன் வட்டார துணை ஆணையர் அப்துல் ரசூல் சமரச பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.
Hindusthan Samachar / vidya.b