Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 16 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், வர்கலா வழியாக கொல்லம் வரை அனந்தபுரி விரைவு (20635) இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த ரயில் கடந்த சில தினங்களாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் எழும்பூரில் தொடர்ந்து பணிகள் நடப்பதால், அனந்தபுரி விரைவு பிப்ரவரி மாத தொடக்கம் வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். அதன்படி ரயில் எண் 20636 கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், வரும் பிப்ரவரி 2ம் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் அந்த ரயில் தாம்பரத்திற்கு அதிகாலை 5.20 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக ரயில் எண் 20635 சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தாம்பரத்திலிருந்து வரும் பிப்ரவரி 3ம் தேதி வரை புறப்பட்டு வரும்.
இந்த ரயில் தாம்பரத்திலிருந்து வழக்கமான நேரமான இரவு 8:20 மணிக்கு புறப்பட்டு தென்மாவட்டங்கள் வழியாக கொல்லம் செல்லும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b