Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 16 டிசம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை காவல் எல்லைக்கு உட்பட்ட சின்ன அழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது 13 வயதான மகன் கே.ஆனைப்பட்டியில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி வழக்கம் போல் பள்ளி முடித்து திரும்பிய மாணவரை, அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ், மோகன், அருள் மணி ஆகிய மூன்று பேர் தங்களது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு, எங்கள் வீட்டில் இருந்து ரூ.7 ஆயிரம் பணத்தை திருடினாயா? என்று கேட்டு மாணவரை தலைகீழாக கட்டி தொங்க விட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், வலி தாங்க முடியாத மாணவர் ஒரு கட்டத்தில் பணத்தை எடுத்ததாக ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து, வீட்டிற்கு வந்த மாணவர் நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதில், மாணவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக குஜிலியம்பாறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, மாணவரை அடித்தது ஏன் என்று கேட்க சென்றவர்களையும் தினேஷ், மோகன், அருள் மணி ஆகியோர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மாணவரை கட்டி வைத்து அடித்த புகார் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை கூறுகையில், “என் மகனை அழைத்துச் சென்று தலை கீழாக கட்டி தொங்க விட்டு அடித்துள்ளனர். அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கேட்க சென்றவர்களையும் அடித்துள்ளனர்.
என் மனைவி பார்வை மாற்றுத்திறனாளி. என் மகனுக்கு நான் மட்டும் தான். காவல் துறை முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN