‘மார்க்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச .) சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’
Mark


சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச .)

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’

இந்த மாதம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வரவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பேசிய நடிகர் குரு சோமசுந்தரம்,

கன்னட சினிமாவில் மிகப்பெரிய ஹீரோ சுதீப்புடன் மிகப்பெரிய கமர்ஷியல் படத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சி. படத்தில் எனக்கு மிக நல்ல கதாபாத்திரமும் ஸ்டைலிஷான காஸ்ட்யூமும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய். நடனமும் ஆடியிருக்கிறேன்.

படம் பார்த்து மகிழுங்கள். என்றார்.

இயக்குநர் விஜய் கார்த்திகேயன் பேசும் போது,

இந்த மேடையில் நான் இருக்க முக்கிய காரணமே சுதீப் சார்தான். அவர் போன்ற பெரிய நடிகருடன் இரண்டாவது முறை படம் செய்வது எளிது கிடையாது. அவருடன் வேலை செய்வது என் சகோதரருடன் பணிபுரிவது போல இருக்கும். ’மேக்ஸ்’ படத்திற்கான சீக்வல் செய்ய ஒன்றும் இல்லை. அதனால், வேறு கதை என்று யோசித்தபோது சுதீப்பின் நகைச்சுவை பக்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றியது. அதை ‘மார்க்’ படத்தில் பார்ப்பீர்கள். சுதீப் ரசிகர்களுக்காகவே எழுதிய கதை இது. நிச்சயம் படம் அவர்களுக்குப் பிடிக்கும். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாங்கள் மூன்றாவது முறை இணையவும் வாய்ப்பிருக்கிறது. அதை காலமும் சூழலும் முடிவு செய்யும்.என்றார்.

நடிகர் நவீன் சந்திரா பேசியது, “

பல வருடங்களாக தமிழ், தெலுங்கில் படம் நடித்துக் கொண்டிருந்தேன். கன்னட ரசிகர்கள் அவர்களுடன் என்னை கனெக்ட் செய்து கொள்ளும்படியான கதாபாத்திரம் வர வேண்டும் என காத்திருந்தேன். அப்படியான படமாக ‘மார்க்’ எனக்கு அமைந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பெயர் ‘பத்ரா’. என்னுடைய அம்மா சுதீப் சாரின் மிகப்பெரிய ரசிகை. அவருக்கும் இந்தப் படத்தில் நான் நடித்தது மகிழ்ச்சி. எங்கள் படக்குழுவினரை சுதீப் சார் உற்சாகமாக வைத்திருந்தார்.என்றார்.

நடிகர் யோகி பாபு பேசியது,

நான் சினிமாத்துறைக்கு வந்து 22 வருடங்கள் ஆகிறது. வளர்ச்சி வந்தால் பிரச்சினைகளும் கூடவே வரும் என்பார்கள். அதுபோலதான் என் மீது சுமத்தப்படும் பல பழிகளும். இந்தப் படத்தில் பணிபுரிந்தது நல்ல அனுபவம். படத்தில் கிச்சா சுதீப் சார் நிறைய விஷயங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது.என்றார்.

நடிகை தீப்ஷிகா பேசியது,

'மார்க்' படம் எங்களுக்கு அற்புதமான அனுபவத்தை கொடுத்தது. சுதீப் சார் எங்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.

நடிகை ரோஷிணி பேசியது,

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா சுதீப் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. இந்தப் படம் நன்றாக வர வேண்டும் என எல்லோரும் உழைத்திருக்கிறோம். நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகர் கிச்சா சுதீப் பேசியதாவது,

’மார்க்’ போன்ற படத்திற்காக சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது பெருமையான விஷயம். நிச்சயம் அதற்கான அவுட்புட் திரையில் பார்ப்பீர்கள். கதை சொல்லுதல், புது காட்சிகள், பிசினஸ், நடிகர்களின் நடிப்பு என எல்லாவற்றிலும் புதுமை- வெரைட்டியை பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்ற பணியை இந்தப் படத்தில் செய்திருக்கிறோம் என நம்புகிறேன். விஜய் கார்த்திகேயன் கதை, இயக்கம் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். எங்க செட்டிலேயே பயங்கர பிஸியான நடிகர் என்றால் யோகிபாபுதான். இன்ஸ்டால்மெண்ட்டில் வந்து நடித்துக் கொடுப்பார்.

நடிகர்கள் நாங்களாவது அவ்வப்போது ஓய்வெடுத்தோம். ஆனால், இந்தப் படத்திற்காக இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் இயக்குநர், மற்றொருவர் ஒளிப்பதிவாளர். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என்றார்.

Hindusthan Samachar / Durai.J