Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச)
சமக்கல்வி உரிமையைப் பறிக்கும் திமுக அரசுக்கு நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கல்வியில் சிறந்து விளங்கும் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச உண்டு உறைவிட வசதியுடன் தரமான கல்வியை நல்கும் ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் தனது அற்ப அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தமிழகத்தில் வரவிடாமல் தடுக்கும் திமுக அரசைத் தனது கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளது மாண்பமை உச்ச நீதிமன்றம்.
நாடு முழுவதும் உள்ள 650 நவோதயா பள்ளிகள் மூலம் பல்லாயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் பயன்பெற்று வரும் நிலையில், பெயருக்கு மொழியைக் காரணம் காட்டி மறுத்து, தமிழக கிராமப்புற மாணவர்களை முன்னேறவிடாமல் தடுப்பது முறையானதல்ல எனச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. தமிழகத்தில் பல பள்ளிகள் இருக்கிறதென்றால், கல்வியில் சிறந்து விளங்கும் கிராமப்புற மாணவர்களுக்கான பள்ளியும் இருந்தால் என்ன தவறு என்று சுருக்கென்று கேட்டதோடு, பள்ளிகள் பெருகும் போது தான் முன்னேறும் வாய்ப்புகளும் பெருகும் எனச் சுட்டிக்காட்டி திமுக அரசைத் தலையில் நறுக்கென்று குட்டு வைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இத்தனை ஆண்டுகள் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைத்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க மாவட்டந்தோறும் நவோதயா பள்ளி அமைப்பதற்காக நிலத்தை திமுக அரசு கண்டறிய வேண்டும்.
திமுக அரசு ஒருவேளை இந்த நீதிமன்ற உத்தரவையும் வழக்கம்போல் அவமதித்தாலும் பிரச்சனையில்லை, அடுத்து அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியால் தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகளைத் தொடங்கி, தமிழகத்தின் கல்வித் தரத்தை முன்னேற்றி, மாணவர்கள் சிறந்து விளங்கச் செய்யப்படும்.
இது உறுதி என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ