Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 16 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கைகளை காவல் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அவர்கள் ரோந்து பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பொள்ளாச்சியில் போதைப் பொருள் பயன்படுத்திய 5 நபர்கள் காவல் துறையினரிடம் சிக்கினர்.
கோவை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26), கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த நவீன் நேரு (24), பிரபு (29), சூலேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த பவுன்ராஜ் (24), பொள்ளாச்சியைச் சேர்ந்த சுருட்டை ஹரி என்ற ஹரி பிரசாத் (27) ஆகியோரை கைது செய்து பொள்ளாச்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. வேறு மாநிலங்களில் இருந்து மருத்துவ பயன்பாட்டிற்கு என வலி நிவாரண மாத்திரைகளை, மொத்த விலைக்கு சில தரகர்கள் மூலம் வாங்கி வாங்கி வந்துள்ளனர்.
இந்த வலி நிவாரண மாத்திரைகளை பொடியாக்கி, இதை மருத்துவமனைகளில் குளுகோஸ் ஏற்றும் பாட்டில்களில் கலந்து இவர்கள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.
மேலும், இதனை மாத்திரை வடிவத்திலும், ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தும் திரவ வடிவிலும் போதைப் பொருளாக உருவகப்படுத்தி நிழல் உலக போதை சந்தைக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கும்பல் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பணத்தின் அடிப்படையாக மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலரை குறி வைத்து, போதை பொருள் விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக, நாடு முழுவதும் இந்த போதை பொருட்கள், பல்வேறு இடைத் தரகர்கள் மூலமாகவும், போதை பொருளை பயன்படுத்தும் நுகர்வோர் மூலமாகவும், புதிய வாடிக்கையாளர்களை இதில் சேர்ந்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.
போதை பொருளின் அளவைப் பொறுத்து, சிறிய முதல் பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்ட 5 பேரிடம், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Hindusthan Samachar / ANANDHAN