Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 16 டிசம்பர் (ஹி.ச.)
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைப்பதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை (டிசம்பர் 17) வேலூர் வருகின்றார்.
இதனை முன்னிட்டு வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வேலூர் நகரம் மற்றும் குறிப்பாக தங்கக்கோவில் சுற்றியுள்ள வளாகப் பகுதி முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர்.
அப்பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ள நிலையில் கோவில் சுற்றியுள்ள அரியூர் பகுதிகளில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளில் வெளி மாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் யாரேனும் தங்கி உள்ளார்களா? சந்தேகப்படும் நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சிறப்பு பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான குழுவினர் கோவில் சுற்று வட்டாரப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
கோவில் பகுதியில் 2 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை காலை 11.05 மணிக்கு திருப்பதியில் இருந்து ஸ்ரீபுரத்துக்கு வருகிறார். தங்கக்கோவிலில் ஜனாதிபதி தியான மண்டபத்தை திறந்து வைத்து, சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மதியம் 12.30 மணி அளவில் மீண்டும் ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
தியான மண்டப திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து ஸ்ரீபுரத்துக்கு நாளை காலை வருகை தர உள்ளார்.
விழா நேரத்தில் நேரத்தில் ஸ்ரீபுரம் -ஓசூர் சாலையில் போக்குவரத்துத் தடை செய்யப்பட உள்ளது.
Hindusthan Samachar / vidya.b