Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 16 டிசம்பர் (ஹி.ச.)
புதுச்சேரியில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வரும் ஜனவரி 3, 4 மற்றும் 5ஆம் தேதிகளில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
அந்த அறிவிப்பின் படி, புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா இரண்டு கிலோ விலையில்லா கோதுமை தரும் திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,
புதுச்சேரியில் சட்டப்பேரவையில் அறிவித்தபடி இலவச அரிசி, கோதுமை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தற்போது கோதுமை மாதம் இரண்டு கிலோ இலவசமாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தரப்படும். முதற்கட்டமாக இரண்டு மாதங்களுக்கு என நான்கு கிலோ கோதுமை தருகிறோம்.
மஞ்சள் ரேஷன் அட்டைக்கு 10 கிலோ இலவச அரிசி, சிவப்பு ரேஷன் அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கி வருகிறோம். இனி அரிசியுடன் கோதுமையும் இலவசமாக ரேஷனில் தரப்படுகிறது.
ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பொருட்கள் ரேஷனில் ஜனவரி 3, 4
மற்றும் 5-ம் தேதிகளில் தரப்படும். மகளிர் உதவித் தொகையை உயர்த்தி தருவது உட்பட சட்டப்பேரவையில் அறிவித்த அனைத்து வாக்குறுதியும் செயல்படுத்தப்படும்.
ரேஷன் கடைகள் சரிவர இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டை குறிப்பிட்டு கேட்கிறீர்கள். அரிசி, கோதுமை, தீபாவளி பொருட்கள் ரேஷன் மூலம் தருகிறோம். பொங்கல் பொருட்கள் விநியோகத்தையும் ரேஷனில்தான் செயல்படுத்துகிறோம். இதில்
குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.
அரசு உள்கட்டமைப்பை மேம்படுத்தி செயல்படுத்துகிறது. பல பணிகளை முடித்துள்ளோம். இதற்கு முன் இருந்த அரசில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். பல துறைகளில் தற்போது பணிகள் நடக்கின்றன.கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். காலி பணியிடங்களை நிரப்பி வருகிறோம்.
ஐந்தாண்டு காலம் நிறைவடையும்போது முழுமையாக வாக்குறுதிகள் நிறைவேற்றியது தெரியும். நாங்கள், சொல்லாததையும் செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam