Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 16 டிசம்பர் (ஹி.ச.)
அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் உதவி ஆய்வாளராக (SI) பணிபுரிந்து வந்தவர் அந்தோணி மாதா.
இவர் நேற்று முன் தினம் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார், உயிரிழந்த எஸ்ஐ-யின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், மீஞ்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரஞ்சித்குமார் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவில் (BNS 108) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, அந்தோணி மாதாவுக்கு திருமணாமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்திருக்கிறார்.
அப்போது அவர் முதலில் பணிபுரிந்த மீஞ்சூர் நிலையத்தில், எஸ்.ஐ.யாக இருக்கும் ரஞ்சித்குமாருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் நடந்த தினத்தன்று, ரஞ்சித்குமாரும், அந்தோணி மாதாவும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, ரஞ்சித்குமார் அழைப்பை துண்டித்துள்ளார்.
பிறகு சிறிதுநேரத்தில், ரஞ்சித்குமார் தொடர்பு கொண்டபோது அந்தோணி மாதா அழைப்பை ஏற்கவில்லை என தெரிகிறது.
இதனால், சந்தேகமடைந்த ரஞ்சித்குமார், அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. இதன் அடிப்படையில், அந்தோணி மாதா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், எஸ்.ஐ. ரஞ்சித்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், நடந்த விவரங்களை எஸ்.ஐ. ரஞ்சித்குமார் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவரை சஸ்பெண்ட் செய்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் அந்தோணி மாதாவின் சகோதரி செல்வராணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘தன்னுடைய அக்கா அந்தோணி மாதாவுக்கு உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் இல்லை. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது. அன்றிரவு அக்காவின் தொலைபேசியில் இருந்து மீஞ்சூர் உதவி ஆய்வாளர் ரஞ்சித்குமார் எனது தந்தைக்கு தொலைபேசியில் பேசியுள்ளார். பூட்டிய வீட்டில் உள்ள அக்காவின் தொலைபேசியின் லாக்கை ஓபன் செய்து எப்படி பேச முடியும்?
மேலும், கதவை உடைத்து அக்காவை மீட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர். இவ்வளவு சம்பவம் நடக்கும் வேளையில் இரண்டு குழந்தைகளும் எப்படி வீட்டில் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்க முடியும்? கதவை உடைக்கும் சத்தம் குழந்தைகளுக்கும் கேட்கவில்லையா? நாங்கள் வந்துதான் அக்காவின் குழந்தைகளை எழுப்பினோம். இதுவும் எங்களுக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.
அக்காவின் முகத்தில் காயம் உள்ளது. இது திட்டமிட்ட கொலை. பிரேத பரிசோதனை முடிவு கிடைக்காமல் எப்படி தற்கொலை என அம்பத்தூர் போலீசார் முடிவுக்கு வந்தனர். அவசர அவசரமாக எங்களிடம் ஏன் கையெழுத்தை வாங்க வேண்டும்? அக்கா மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அக்கா எப்படி உயிரிழந்தார்? என்பதை எங்களுக்கு கூற வேண்டும்’ என வீடியோவில் விரிவாக பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN