Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 16 டிசம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகள், செங்கல் சூளைகள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளம் பகுதியில் செயல்படும் ஒரு கல்குவாரிக்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்கு சேர்ந்துள்ளனர்.
இவர்களுக்கு, திருநெல்வேலியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது மஹ்புல் ஹுசைன் (27) என்பவர், கல்குவாரி உரிமையாளரிடம் கமிஷன் தொகை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி கொடுத்துள்ளார்.
இருப்பினும், போதிய அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான சம்பளம் இல்லாத காரணத்தால், அசாம் தம்பதியர் வேலையில் இருந்து விலகுவதாக கூறியுள்ளனர். தொடர்ந்து, கேரளா மாநிலத்திற்கு வேலைக்கு செல்வதாக முடிவு செய்து, அவர்கள் திருநெல்வேலிக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர்.
இதற்கிடையே, அவர்களை செல்போனில் தொடர்பு கொண்ட முகமது மஹ்புல் உசேன், கல்குவாரிலேயே வேலை செய்யும்படி மிரட்டியுள்ளார். தொடர்ந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தனது இருசக்கர வாகனத்தில் இரண்டு இளம் சிறார்களுடன் சிவந்திபட்டி பகுதியில் மஹ்புல் உசேன் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த அசாம் தம்பதியரை, மஹ்புல் உசேன் உள்ளிட்டோர் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றனர்.
பின்னர், கல்குவாரியில் இருந்து பணம் எடுத்ததாக கூறி மூவரும் சேர்ந்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கணவர் கண்முன்பே முகமது மஹ்புல் உசேன் உட்பட மூவரும், அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முகமது மஹ்புல் ஹுசைன் மற்றும் இரண்டு இளம் சிறார்களை கைது செய்தனர்.
சிறுவர்கள் இருவரும் நெல்லையை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவர் கண் எதிரே மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN