Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி , 16 டிசம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் இன்று (16.12.2025) மாவட்ட ஆட்சியர் அவர்களின் கனிமவள நிதியிலிருந்து ரூ.25 இலட்சம் மதிப்பில் தூத்துக்குடி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் ANPR கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதற்கான கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், திறந்து வைத்தார்.
மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வந்த காவல் கட்டுப்பாட்டு அறை டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளுடன் முதற்கட்டமாக புதிதாக நவீன காவல் கட்டுப்பாட்டு அறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.திட்டமிடப்பட்ட ANPR கேமராக்கள் தானாகவே, மாவட்ட எல்லைகள் வழியாக வாகனங்கள் மூலம் மணல், கனிமங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும், வேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறியவும், குற்றச் செயல்களில் ஈடுபட்டு பிற மாவட்டங்களுக்குத் தப்பிச் செல்லும் குற்றவாளிகளைக் கண்டறியவும், எல்லைகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை மேம்படுத்தவும், பின்வரும் சோதனைச் சாவடிகளில் நிறுவப்பட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் கனிமவள நிதியிலிருந்து ரூ.25,00,000/- மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் எல்லை சோதனைச் சாவடிகளான 1.கோடாங்கிபட்டி, 2.வேம்பார், 3.தோட்டிலோவன்பட்டி, 4.பருத்திகுளம், 5.செய்துங்கநல்லூர் 6.இடைச்சிவிளை ஆகிய 6 சோதனைச் சாவடிகளில் ANPR (Automatic Number Plate Recognition) எனப்படும் வாகன எண்களை தானியங்கி முறையில் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் 2 தொழில்நுட்ப கேமராக்களும் மற்றும் VF (Varifocal Lens Camera) கேமரா எனப்படும் காட்சிகளை துல்லியமாக Zoom செய்து பார்க்கக்கூடிய 2 தொழில்நுட்ப CCTV கேமராக்களும் அதனை கண்காணிக்க கணினி திரையும் பொருத்தப்பட்டு அவை நேரடியாக மேற்படி நவீன காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணிநேரமும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் வாகனங்களை கண்காணிக்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் GPS பொருத்தப்பட்ட காவல் இருசக்கர ரோந்து வாகனங்கள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் (Highway patrol) மற்றும் காவல் நிலைய நான்கு சக்கர ரோந்து வாகனங்களை நேரடியாக கண்காணிக்கவும், மாஸ்டர் கன்ட்ரோலுக்கு வரும் புகார் அழைப்பிற்கு செல்லும் ரோந்து வாகனங்களை இங்கிருந்தபடியே 2 கணினி திரையில் live Navigation Map மூலம் கண்காணிக்கும் தொழில் நுட்ப வசதி உள்ளது. மேலும் காவல்துறையினருக்கு மைக் மூலம் கொடுக்கும் தகவல் தொடர்பை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையும் மற்றும் முக்கிய திருவிழா நேரங்களிலும், முக்கிய பாதுகாப்பு பணிகளிலும் காவல்துறை ட்ரோன் (Drone Camera) கேமரா காட்சிகளை இங்கிருந்து நேரடியாக கண்காணிக்கும் வசதியும் இந்த நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் ஒருங்கிணைக்கப்பட்டு முதற்கட்டமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதன் அடுத்த கட்டமாக மீதமுள்ள மாவட்டத்தின் அனைத்து எல்லை சோதனை சாவடிகள் மற்றும் மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்கள், சந்திப்புகள் ஆகியவற்றில் மேற்படி ANPR கேமராக்கள் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மேற்படி டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் மேம்படுத்தப்பட்ட நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் இன்றையதினம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி இரா.ஐஸ்வர்யா, தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மதன், காவல் உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b