Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச.)
பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று
(டிசம்பர் 17) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது,
பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா?
கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?
மூன்று விவசாய சட்டங்கள், சிஏஏ போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா திருவாளர் பழனிசாமி?
MGNREGA-வில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்?
திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை அதிமுக எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?
வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்?
இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்களது கட்சிக்கு, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பெயர் எதற்கு?
நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்!
என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b