சென்னையில் பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச.) சென்னை மயிலாப்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ராஜிலா (55) என்பவர், மயிலாப்பூரில் உள்ள
செயின் பறிப்பு


சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை மயிலாப்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ராஜிலா (55) என்பவர், மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு, இரவு 8.30 மணி அளவில் மயிலாப்பூர் ஆர்.கே. சாலை வழியாக பட்டினப்பாக்கம் லூப் சாலைக்கு மீன் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, எலோ பேஜஸ் அலுவலகம் அருகே, பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், ராஜிலாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை திடீரென பறித்துக் கொண்டு அதிவேகமாக தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

சங்கிலி பறிக்கப்பட்டதை உணர்ந்த ராஜிலா, அந்த நபரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதன் போது கட்டுப்பாட்டை இழந்த அவர் நிலை தடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் காயமடைந்துள்ளார்.

உடனடியாக அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மயிலாப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை நகரின் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நடைபெற்ற இந்த சங்கிலி பறிப்பு சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam