Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச.)
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்றத்துக்கான நிர்வாகக் குழுவின் 3வது கூட்டம் இன்று (டிசம்பர் 17) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை சார்ந்த வழிகாட்டுதலை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்ற இந்த கூட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஆலோசனை வழங்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது.
நிர்வாகக் குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
இந்தியாவிற்கே வழிகாட்டும் நிலையில் தமிழ்நாடு உள்ளது. எப்போதாவது புயல் தாக்கும் என்ற நிலையை நாம் தாண்டிவிட்டோம். காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கண்கூடாக பார்க்கிறோம். டிட்வா புயலின் கோரத் தாண்டவத்தை பார்த்தோம். பேரிடரால் இலங்கை உள்ளிட்ட நாடுகள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளன என்பதை பார்த்தோம்.
பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 297 பசுமை பள்ளிகளில் கூல் ரூஃப் திட்டம் செயல்படுத்தப்படும். அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் டிட்வா புயலால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அலையாத்தி காடுகளின் பரப்பளவு 2 மடங்கு அதிகரித்துள்ளது. மிக விரைவில் காலநிலை கல்வி அறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. கால நிலை மாற்றம், நெகிழி ஒழிப்புக்காக 200 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இ-ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன. திராவிட மாடல் அரசு பெண்களுக்கான அரசாக எல்லா துறைகளிலும் பெயர் வாங்கியுள்ளது.
மக்கள் அதிக எண்ணிக்கையில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்க மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்தை ஊக்கப்படுத்தவே 120 மின்சார பேருந்து சேவை அறிமுகம்.
மேலும் 600 மின்சார பேருந்துகளை பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வரப்போகிறோம்.அரசுக்கு வளர்ச்சி ஒரு கண் என்றால் சுற்றுச்சூழல், இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றொரு கண். பேரிடர் நிதியாக 24,000 கோடிக்கு மேல் கேட்கப்பட்டிருந்த நிலையில் ஒன்றிய அரசு வெறும் 17% மட்டுமே வழங்கியது.
ரூ.24,670 கோடி நிதி கேட்டதில் ரூ.4,130 கோடியை மட்டுமே கொடுத்துள்ளது. எத்தனையோ பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வென்றுள்ளது.
அதேபோல் காலநிலை மாற்ற சவாலையும் எதிர்கொண்டு தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b