அதிமுக ஆட்சிக்கு வந்தால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் – எடப்பாடி பழனிசாமி
சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச) அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லேப்டாப் வழங்கும் திட்டத்தை கிடப்பில் போட்டு மாணவர்களின் நலனில் திமுக அரசியல் செய்வதாகவும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படு
Eps


சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச)

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லேப்டாப் வழங்கும் திட்டத்தை கிடப்பில் போட்டு மாணவர்களின் நலனில் திமுக அரசியல் செய்வதாகவும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட விலையில்லா லேப்டாப் மூலம் பயனடைந்தவர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிலர் நேரிலும் சிலர் காணொளி காட்சி மூலமாகவும் பங்கேற்றனர்.

அவர்களுடன் கலந்துரையாடிய அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களும் கல்வியில் சிறக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் சுமார் 65 லட்சம் அரசு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டதாகவும், அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டம் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக திமுக அரசு அந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டதாக குற்றம்சாட்டினார்.

இளைஞர்களின் வாக்குகளை பெற தேர்தலை மனதில் வைத்து கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக விமர்சித்த அவர்,

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.

அதனை தொடர்ந்து, அரசு வழங்கிய லேப்டாப் உங்களுக்கு எப்படி பயன் அளித்தது என பயன்பெற்றவர்களிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டார்.

அவருக்கு பதிலளித்த பயனாளிகள், கிராமத்தில் பள்ளியில் பயின்ற தங்களுக்கு அரசு வழங்கிய லேப்டாப் மிகவும் பயனளித்ததாகவும், கல்லூரி படிப்புக்காக நகர பகுதிக்கு வந்த போது, சக மாணவர்களுக்கு இணையாக பயில அரசு வழங்கிய லேப்டாப் மிகவும் உதவியாக இருந்ததாக பதில் அளித்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ