Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 17 டிசம்பர் (ஹி.ச.)
சேலத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு அழகிரிநாதர் சுவாமி கோயில் மற்றும் அருள்மிகு அம்பலவாண சுவாமி கோயில்கள் உள்ளன. நவாத்திரி விழாவின் போது, இந்த கோவிலுக்குச் சொந்தமான, 800 ஆண்டுகள் பழமையான கல் மண்டபங்களில் நடக்கும் 10-ஆம் நாள் திருவிழாவான, ‘அம்பு போடும் திருவிழா’ மக்களால் விமரிசையாக கொண்டாடப்படும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.
ஆனால், சமீப காலமாக கோயிலுக்குச் சொந்தமான சம்பந்தப்பட்ட கல் மண்டபங்களில், திருவிழாக்கள் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை எனக்கூறி சேலத்தைச் சேர்ந்த முனைவர் ஆனந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில்,
விழாக்கள் நடத்தப்படும் கோயிலுக்குச் சொந்தமான கல்மண்டபங்களை, கோயில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், அவை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இது தொடர்பாக, சேலம் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும், இதுவரை கல் மண்டபங்களை சீரமைக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சேலம் அம்மாபேட்டையில் உள்ள இரண்டு கல் மண்டபங்களையும் சீரமைத்து புதுபிக்க இந்து சமய அறநிலையதுறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி பரத சக்ரவரத்தி முன் இன்று (டிசம்பர் 17) விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து அறநிலையத்துறை தரப்பில், கல் மண்டபங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், தொடர்ந்து 10 ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மட்டுமே அறநிலையத்துறை தெரிவித்து வருகிறது என்றும், ஆனால், இதுவரை எந்த பணிகளும் நடைப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட கோயிலுக்குச் சொந்தமான, இரு கல் மண்டபங்களையும் பழமை மாறாமல் விரைந்து புனரமைத்து, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN