Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச.)
காவிரி டெல்டா பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக, ஆழ்துளை கிணறுகள் அமைப்பதால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, தமிழக விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், திருவாரூர் மாவட்டம், கரியமங்கலத்தில் கடந்த 2015 ம் ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தின் போது, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சொத்துக்கள் சேதப்படுத்தியதாக, பி.ஆர்.பாண்டியன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக விக்கிரபாண்டியம் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் அமர்வு நீதிமன்றம், பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜுக்கு தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 22 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த தீர்ப்பை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பி.ஆர்.பாண்டியன் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, விவசாயி என்ற முறையில் போராட்டத்தில் ஈடுப்பட்டதற்காக 13 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதாக கூறினார். 22 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இருவர் மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனையடுத்து, மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்
Hindusthan Samachar / GOKILA arumugam