ராமலிங்கம் கொலை வழக்கு - 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது!
தஞ்சாவூர், 17 டிசம்பர் (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக பிரமுகரான இவர், சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வந்தார். இதனிடையே, கடந்த 2019ஆம் ஆண்டு அவரது பகுதிக்கு மதப் பிரச்சாரத்திற்கு
PMK Ramalingam Murder Case


தஞ்சாவூர், 17 டிசம்பர் (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக பிரமுகரான இவர், சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வந்தார்.

இதனிடையே, கடந்த 2019ஆம் ஆண்டு அவரது பகுதிக்கு மதப் பிரச்சாரத்திற்கு வந்தவர்கள் அணிந்திருந்த குல்லாவை பறித்து, ராமலிங்கம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒருதரப்பை சேர்ந்த சிலருக்கும், இவருக்கும் பகை ஏற்பட்டது.

இந்த சூழலில், கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, மர்மநபர்கள் சிலரால் ராமலிங்கம் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தஞ்சை மாவட்ட போலீசார் நடத்திய விசாரணையில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த கொலையை திட்டமிட்டு செய்தது தெரியவந்துள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டிருப்பதால், தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை எடுத்து விசாரிக்கத் தொடங்கியது. இதுதொடர்பாக பல்வேறு இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.

இதையடுத்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளான தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா(37), அப்துல் மஜீத்(37), புர்ஹானுதீன்(31), சாகுல் ஹமீது(30), நபில் ஆசான்(31) உள்ளிட்ட 6 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக என்ஐஏ அறிவித்தது. அத்துடன், அவர்களை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை என்ஐஏ அதிகாரிகள் அடுத்தடுத்து கைது செய்து வந்தனர். ஆனால், ஏ1 ஆக குற்றம்சாட்டப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரான முகமது அலி ஜின்னா தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில், என்ஐஏ அதிகாரிகள் சென்னையில் வைத்து முகமது அலி ஜின்னாவை கைது செய்தனர். மேலும், சென்னையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த அஸ்மத் ஓசூர் என்பவரையும் கைது செய்துள்ளனர்.

6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முகமது அலி ஜின்னா கைது செய்யப்பட்டிருப்பதால், ராமலிங்கம் கொலை வழக்கில் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN