Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 17 டிசம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்புக்கு எதிராக அறநிலையத்துறை மற்றும் மதுரை ஆட்சியர் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் இன்று
(டிசம்பர் 17) விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்றைய விசாரணையின் போது, மனுதாரர் ராமரவிக்குமார் சார்பில் வழக்கறிஞர் கூறியதாவது,
தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை, உத்தரவை நிறைவேற்றுவது அரசின் கடமை; பொது அமைதி கெடும் என்பது சாக்குபோக்கு. தனி நீதிபதி தீர்ப்பில் தனது கருத்துகளை திணித்துள்ளதாக எதிர்த்தரப்பினர் வாதிடுகின்றனர்; அது சரியல்ல.
இரு மதத்தினர் இடையே பிரச்சனை ஏற்படும் என்பதற்காக அடிப்படை உரிமையை நிறைவேற்ற அரசு தயங்கக்கூடாது. 1996ல் திருப்பரங்குன்றம் மலை உச்சி தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி கனகராஜ் உத்தரவிட்டார், இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி கனகராஜ் உத்தரவு பிறப்பிக்கவில்லை. 1996ல் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றவேண்டும் என நீதிமன்ற உத்தரவில் இல்லை. தர்காவிலிருந்து 15 மீட்டர் தொலைவில் கோயிலுக்கு சொந்தமான எந்த பகுதியிலும் தீபம் ஏற்றலாம் என்றுதான் கூறினார். மனு விசாரணைக்கு ஏற்றதா என்பது குறித்து மட்டும் மனுதாரர் வாதிட வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபங்கள் ஏற்றியதற்கான சான்றுகள் உள்ளதா? மலை உச்சியில் தீபம் ஏற்ற குறுக்கு வழியை கையாண்டது ஏன்? தனி நீதிபதி உத்தரவை அவசரமாக நிறைவேற்ற ஏன் உத்தரவு பிறப்பித்தார் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
Hindusthan Samachar / vidya.b