Enter your Email Address to subscribe to our newsletters

திருச்செந்தூர், 17 டிசம்பர் (ஹி.ச)
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் முருகன் கோயில்.
இந்த கோயிலின் முன்பு கடல் இருப்பதால் சிறந்த ஆன்மிக சுற்றுலாத் தளமாகவும் விளங்கி வருகிறது.
தினந்தோறும் இந்த கோயிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதிலும் விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழா சமயங்களில் இங்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவதுண்டு.
கோயிலுக்கு வருகிற பக்தர்கள் அனைவரும் அங்குள்ள கடற்கரையில் புனித நீராடிவிட்டுச் சென்று முருகனை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கோயில் முன்புள்ள கடல் அடிக்கடி சீற்றத்துடன் உள்வாங்கியும், பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புவதுமாக காணப்படுகிறது. அதிலும் கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்குவதால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அடிக்கடி வெளியே தெரிகின்றன.
இதுபோன்று அடிக்கடி உள்வாங்குவதால் கடந்த வருடம் கடல் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் கடலரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக கோயில் முன்புள்ள கடற்கரைக்கு இறங்கும் படிக்கட்டு பகுதியில் இருந்து சுமார் 200 அடி நீளத்திற்கும், கடல் நீர் உள்ள பகுதியில் இருந்து மணல் தேங்கியுள்ள கடற்கரை வரை சுமார் 5 அடி உயரத்துக்கும் கடல் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் பக்தர்கள் கோயில் முன்புள்ள கடற்கரை படிக்கட்டு வழியாக கடலுக்குள் இறங்கி நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோயில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதற்காக, கோயில் முன்புள்ள படிக்கட்டு பகுதியிலிருந்து 200 அடி நீளத்திற்கு கம்புகள் கொண்டு தடுப்புகளை அமைத்திருக்கிறது. மேலும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் பக்தர்கள் இறங்கி நீராட தடை விதிக்கப்பட்டள்ளது.
அதுமட்டுமல்லாமல் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் நீராடினாலும் பக்தர்கள் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையாகவும் நீராட எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த பலகைகளில், 'கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு அதிகமாக உள்ளது.
பக்தர்கள் பாதுகாப்பாக நீராட வேண்டும்.
தடுப்புகளை தாண்டி நீராடக்கூடாது.
கூர்மையான பாறைகள் உள்ளதால் பாதுகாப்பாக நீராட வேண்டும்.
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் இடம் பெற்றுள்ளன.
Hindusthan Samachar / ANANDHAN