Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 டிசம்பர் (ஹி.ச.)
வேலை செய்யத் தயாராகவும், வேலை தேடியும் இருப்பவர்கள் இருந்தும், அவர்களுக்கு பொருத்தமான வேலை கிடைக்காத நிலையே வேலைவாய்ப்பில்லாத நிலை எனப்படுகிறது.
இது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிடும் முக்கிய குறியீடுகளில் ஒன்று.
வேலைவாய்ப்பில்லாதோர் அதிகரித்தால், மக்களின் வருமானம் குறைந்து, நுகர்வு மற்றும் உற்பத்தி பாதிக்கப்படும்.
உலகின் அதிகபட்ச மக்கள்தொகையை கொண்ட நமது நாட்டின் முக்கிய பொருளாதார பிரச்சினைகளில் ஒன்றாக வேலையின்மை இருக்கிறது. இதனை சீரமைக்க அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
இந்தியாவில் வேலையின்மையை மத்திய புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கணக்கீட்டு மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் வேலையின்மை விவரம் குறைந்தது. நாட்டின் 15 வயதிற்கு மேற்பட்டோருக்கான வேலையின்மை விகிதம் கடந்த நவம்பரில் 4.7 சதவீதமாக குறைந்தது. இது கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவு சரிவாகும்.
கடந்த அக்டோபரில் நாட்டின் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணமாக அரசு மற்றும் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டதும் கிராமப்புறம் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு உயர்ந்ததே காரணமாகும். கிராமப்புறத்தில் வேலையின்மை வீதம் 3.9 சதவீதமாக குறைந்தது.
உரிய தொழிற்சாலைகள், கட்டமைப்புகள் இல்லாத காரணத்தால் கிராமங்களில் பொதுவாகவே வேலையின்மை வீதம் அதிகமாக இருக்கும்.
இதனால் வேலை தேடி நகரங்களுக்கு குடிபெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கிராமப்புற வேலையின்மை தற்போது குறைந்துள்ளது. நாட்டின் நகர்ப்புற வேலையின்மை வீதம் 6.5 சதவீதமாக குறைந்துள்ளது.
பெண்கள் வேலையின்மை அக்டோபர் மாத 5.4 சதவீதத்தில் இருந்து 4.8 சதவீதமாக சரிந்தது. இதில் கிராமப்புற பெண்கள் வேலையின்மை 3.4 சதவீதமாகவும், நகர்ப்புற பெண்கள் வேலையின்மை 9.3 சதவீதமாக பதிவானது. உண்மையான வேலைவாய்ப்பை தெரிவிக்கும் மொத்த தொழிலாளர் மக்கள் வீதம் 53.2 சதவீதமாகும்.
வேலை செய்பவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களை அடங்கிய தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 55.8 சதவீதமாக உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM